

தேனி
நீட் ஆள்மாறாட்டம் சம்பவத்தில் மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்த தேனி அரசு மருத்துவக் கல்லூரி உட்பட 4 கல்லூரிகளின் பேராசிரியர்களிடம் தேனி சிபிசிஐடி போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் உதித்சூர்யாவை சிபிசிஐடி போலீ ஸார் முதலில் கைது செய்தனர். இவர் கொடுத்த வாக்குமூலத்தின் படி, இவ்வழக்கில் இதுவரை உதித்சூர்யா, ராகுல், பிரவீன், இர்பான் ஆகிய 4 மாணவர்கள், அவர்களது தந்தையர், ஒரு மாணவி, அவரது தாயார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு, ஜாமீன் மனு மீதான விசாரணை ஆகியவற்றுக் காக சிபிசிஐடி போலீஸார் ஆஜரானபோது தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பல்வேறு கேள்வி களை முன்வைத்தது. ‘இதில் பிடிபட்ட மாணவர்கள் கல்லூரியில் சேரும்போது சான்றிதழ்களை சரி பார்த்த குழுவினரிடம் ஏன் இது வரை விசாரணை நடத்தவில்லை’ என்று தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய கல்லூரி களுக்கு இதற்கான உத்தரவை சிபிசிஐடி போலீஸார் அனுப்பினர். அதை ஏற்று சென்னை சத்யசாயி கல்லூரியைச் சேர்ந்த 8 பேர், எஸ்ஆர்எம் கல்லூரியைச் சேர்ந்த 3 பேர் விசாரணைக்காக தேனி சிபிசிஐடி அலுவலகத்துக்கு நேற்று பிற்பகல் வந்தனர். இக்குழுவில் பேராசிரியர்கள், அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.
3 மணி நேரம் விசாரணை
இவர்களிடம் ஆய்வாளர் சித்ராதேவி 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினார். சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கான விதிமுறைகள், இப்பணியின்போது சம்பந்தப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் குறித்து சந்தேகம் வந்ததா, சான்றிதழ் சரிபார்ப்பில் மற்றவர்களின் தலையீடு இருந்ததா என்பன உட்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
இவர்களைத் தொடர்ந்து சென்னை பாலாஜி மருத்துவக் கல்லூரி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி குழுவினரிடமும் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் இடைத்தரகர்கள் ரஷீத், வேதாசலம் ஆகியோரது தொடர்பு குறித்தும் தெரியவந்துள்ளது. இவர்களைக் கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.