

மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஜூன் 15-ம் தேதிக்குள் தேர்தல் செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இப்பணி ஒருசில தொகுதிகளில் நள்ளிரவு வரை நீடித்தது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார், நிருபர்களுக்கு சனிக்கிழமை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களவை தேர்தலில் போட்டி யிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களின் தேர்தல் செலவு கணக்குகளை ஜூன் மாதம் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிவகங்கையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மட்டும் ஜூன் 16-ம் தேதி தேர்தல் செலவு கணக்குகளை சமர்ப்பிக் கலாம்.
சிவகங்கை தொகுதியில் தேர்தல் முடிவுகள் காலதாமதமாக அறிவிக்கப்பட்டதால் அத் தொகுதி வேட்பாளர்களுக்கு மட்டும் இந்த காலஅவகாசம் அளிக்கப்படுகிறது. தேர்தல் செலவு கணக்குகளைச் சமர்ப்பிக்காதவர்கள் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
பதவி பறிக்கப்படும்
அதோடு, வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்கள் பெயரும் நீக்கப்படும். தேர்தல் செலவு கணக்குகளை சமர்ப்பிக் காதவர்கள், தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவர்களின் பதவி பறிக்கப்படும். டெபாசிட் கட்ட ணத்தை திரும்பப் பெறுவதைப் பொருத்தவரையில், மொத்தம் பதிவான செல்லத்தக்க ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கை வேட்பாளர்கள் பெற வேண்டும்.
அப்போதுதான் வேட்புமனு தாக்கலின்போது அவர்கள் செலுத் திய டெபாசிட் தொகை திருப்பிக் கொடுக்கப்படும். அந்த வகையில், உரிய வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து டெபாசிட் தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
இயந்திரத்தில் கோளாறு
பொதுவாக, வாக்கு எண்ணிக் கையின்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், வேட்பாளர்களுக்குள் ஓட்டு வித்தியாசம் குறைவாக இருக்கும்பட்சத்தில் ஓட்டுகளை எண்ண மாற்று ஏற்பாடு செய்யப்படும்.
ஓட்டு வித்தியாசம் அதிகமாக இருந்தால், பழுதான வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டு களை எண்ண வேண்டிய அவசி யம் இல்லை. அந்த வகையில், திருவண்ணாமலை மற்றும் தென்சென்னை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை வித்தியாசம் அதிகமாக இருந்ததால், பழுத டைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான அவசியம் ஏற்படவில்லை.
இவ்வாறு பிரவீண் குமார் கூறினார்.