

விழுப்புரம்
விக்கிரவாண்டி தேர்தலுக்காக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதில் அவர் பேசும்போது, ‘அதிமுக ஆட்சி முதன் முதலில் எம்.ஜி.ஆரால் தொடங்கி வைக்கப்பட்டது, அதன் பிறகு ஜெயலலிதா அவர்களால் ஓரளவுக்கு வழிநடத்தப்பட்டது. அதை மறுக்க முடியாது.
இப்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கிறார். அவருடைய தலைமையில் அதிமுக ஆட்சி நடக்கிறதா? இல்லை. அவருடைய தலைமையில் பிஜேபி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆக, பிஜேபி என்ன கூறுகிறதோ, அதற்கு அடிபணிந்து கூனிக்குறுகி, மண்டியிட்டு அதையெல்லாம் அப்படியே கேட்டுக் கொண்டிருக்கும் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.
நான் ஏற்கெனவே கூறியது போல் குடிநீர் பிரச்சினை, சாலைப் பிரச்சினை, ரேஷன் கடை பிரச்சினைகள், ஆகியவற்றை உள்ளாட்சி துறைதான் தீர்த்து வைக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்துகிறார்களா என்றால் இல்லை.
திமுக இருந்த போது முறையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. நானே இரண்டு முறை மேயராக இருந்திருக்கிறேன். உள்ளாட்சித்துறைதான் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும்’ என்று உள்ளாட்சி தேர்தலை வலியுறுத்திப் பேசினார் ஸ்டாலின்.