Published : 13 Oct 2019 11:00 AM
Last Updated : 13 Oct 2019 11:00 AM

கோவை - பொள்ளாச்சி, கோவை - பழநி பயணிகள் சிறப்பு ரயில்கள் 15-ம் தேதி முதல் நிரந்தரம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்

கோவை

கோவை - பொள்ளாச்சி, கோவை - பழநி பயணிகள் சிறப்பு ரயில்கள், வரும் 15-ம் தேதி முதல் நிரந்த ரயில்களாக மாற்றம் செய்யப்பட உள்ளன.

போத்தனூர் - பொள்ளாச்சி ரயில் பாதை, அகலப் பாதையாக மாற்றப்பட்டதையடுத்து, கோவை யில் இருந்து பொள்ளாச்சிக்கு கடந்த ஆண்டு ஜனவரி 21-ம் தேதி முதல் பயணிகள் சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டது. முதலில் மூன்று மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவை, பின்னர் ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதேபோல, கோவை - பழநி இடையே இயக்கப்படும் சிறப்பு பயணிகள் ரயிலும், 6 மாதங்களுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மேற்குறிப்பிட்ட இரு சிறப்பு ரயில்களும் வரும் 15-ம் தேதி முதல் நிரந்தரமாக்கப்பட உள்ளன. இந்த ரயில்களின் இயக்கத்தை, டெல்லியில் இருந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைக்க உள்ளார். அதன்பிறகு, கோவையில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு காலை 7.05 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும் பயணிகள் சிறப்பு ரயில் மற்றும் பொள்ளாச்சியில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு காலை 8.45 மணிக்கு கோவை வந்தடையும் பயணிகள் சிறப்பு ரயில் நிரந்தரமாக்கப்பட உள்ளன.

இதேபோல, பழநியில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு கோவை வந்தடையும் பயணிகள் சிறப்பு ரயில் மற்றும் கோவையில் இருந்து பகல் 1.45 மணிக்கு புறப்பட்டு மாலை 4.40 மணிக்கு பழநி சென்றடையும் பயணிகள் சிறப்பு ரயில் நிரந்தரமாக்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘கோவை - பொள்ளாச்சி வழித்தடத்தில் காலையில் இயங்கும் சிறப்பு பயணிகள் ரயில்களை நிரந்தரம் செய்து மட்டுமே அறிவிப்பு வெளியாகி யுள்ளது. மதியம், மாலையில் இயங்கும் பயணிகள் சிறப்பு ரயில்கள் நிரந்தரம் குறித்து, இதுவரை அறிவிப்பு வரவில்லை' என்றனர்.

மீண்டும் தொடக்க விழா?

பயணிகள் கூறும்போது, ‘ஏற்கெனவே கோவை-பொள்ளாச்சி, கோவை-பழநி பயணிகள் சிறப்பு ரயில்களுக்கு தொடக்க விழா நடைபெற்று முடிந்த நிலையில், கோவை ரயில் நிலையத்தில் மீண்டும் மேடை அமைத்து எம்.பி., எம்.எல்.ஏ., ரயில்வே அதிகாரிகளை அழைத்து 15-ம் தேதி மீண்டும் தொடக்க விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் சிறப்பு ரயில், நிரந்தர ரயிலாகும்போது ரயில் எண் மட்டுமே மாறும். அதோடு, ரயில்வே கால அட்டவணையில் அந்த ரயில்கள் விவரம் இடம்பெறும். வேறு எந்த மாற்றமும் இல்லை.

இந்நிலையில், புதிய பயணிகள் ரயில்கள் தொடங்கி வைக்கப்படுவதைப்போல், மத்திய ரயில்வே அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு புதிதாக அந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்கப்போவது போன்ற தோற்றத்தை அளிக்கிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x