Published : 13 Oct 2019 10:33 AM
Last Updated : 13 Oct 2019 10:33 AM

நாங்குநேரி இடைத்தேர்தல்: அதிமுகவினர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கே.எஸ்.அழகிரி கடும் குற்றச்சாட்டு

நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் விரோத அ.தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் கோபத்துடன் இருப்பதால், ஆட்சியாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கட்சியினர் மீது பயன்படுத்தி வருகிறார்கள். நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மூலக்கரைப்பட்டிக்கு வந்த போது அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துகிற வகையில் அவரை கிராமத்திற்குள் நுழையக் கூடாது என்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதற்காக நாங்குநேரி ஒன்றிய புதிய தமிழகம் கட்சி செயலாளர் தளவாய் பாண்டி மீது மூலக்கரைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர். ஜனநாயக நாட்டில் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் அ.இ.அ.தி.மு.க. அமைச்சரின் தூண்டுதலின் பேரில் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் காவல்துறையினர் ஆளுங்கட்சியினரின் கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றனர். இந்த அடிப்படையில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்தவரை கைது செய்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சியினரின் வாக்குகளை பெறுவதற்காக பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் நிறைய வாக்குறுதிகளை வழங்கினார்கள்.ஆனால், அந்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாத நிலையில், நாங்குநேரி இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரிப்பதில்லை என்று புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது. இந்தப் பின்னணியில் தான் அ.இ.அ.தி.மு.க. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பிரச்சாரத்திற்கு வந்த போது கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். தங்கள் வீட்டின் கூறைகளின் மீது கருப்பு கொடியை பறக்கவிட்டுள்ளனர். இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைகள் ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், இதை சகித்துக் கொள்ள முடியாத அ.இ.அ.தி.மு.க.வினர் காவல்துறையை தூண்டி விட்டு இத்தகைய கைது நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

நாங்குநேரி இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வினர், காவல்துறையின் துணையோடு எடுத்து வரும் ஜனநாயக, சட்டவிரோத செயல்களை கைவிட்டு, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். காவல்துறையினரின் இத்தகைய செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்தி, சுயேட்சையாகவும், சுதந்திரமாகவும், பாரபட்சமின்றி நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தல் நடப்பதற்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x