Published : 13 Oct 2019 09:33 AM
Last Updated : 13 Oct 2019 09:33 AM

காஷ்மீர் பிரச்சினை குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசவில்லை; மாமல்லபுரத்தை தேர்வு செய்தது பிரதமர் நரேந்திர மோடிதான்: இந்திய வெளியுறவு துறை செயலாளர் விஜய் கோகலே தகவல்

சென்னை

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்காக மாமல்லபுரத்தை தேர்வு செய்தது பிரதமர் மோடிதான் என்றும் இந்தச் சந்திப்பின்போது காஷ்மீர் பிரச்சினை குறித்து எதுவும் பேசவில்லை என்றும் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

இந்தியா - சீனா பங்கேற்ற 2-வது முறைசாரா உச்சி மாநாடு மாமல்ல புரத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் நடத்திய பேச்சுவார்த்தை யின் விவரங்கள் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் விஜய் கோகலே கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தனியாக 6 மணி நேரம் பேச்சு நடத்தியுள்ளனர். நிறைவு நாளில் மட்டும் இரு தலைவர்களும் தனியாக 90 நிமிடங்கள் பேசினர். நிறைவாக சீன அதிபருக்கு மோடி மதிய விருந்தளித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நீடித்து வரும் கலாச்சாரம், வர்த்தக உறவுகள், இரு நாட்டு பிரச்சினைகள், சர்வ தேச விவகாரங்கள், பொருளாதார சவால்கள், பருவநிலை மாற்றம், பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்ட உலகளாவிய மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த நீண்ட கால, அடிப்படை பிரச்சினைகள், இரு நாடுகளின் முன்னேற்றத்துக்கு தேவையான விஷயங்கள் குறித்து வெளிப்படையாக மனம் திறந்து பேசினர்.

இரு நாடுகளுக்கு இடையே யான வர்த்தகத்தை மேம்படுத்து வது, முதலீடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. வர்த்தக பற்றாக்குறை பற்றி விவாதிக்க இரு நாடுகளும் இணைந்து உயர் மட்ட குழு அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்தக் குழுவில் சீன துணை அதிபரும் இந்திய நிதியமைச்சரும் இடம் பெறுவார்கள்.

இந்தியா - சீனா இடையே உள்நாட்டு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாகவும் அதன் சாதக, பாதகங்கள் தொடர் பாகவும் விவாதிக்கப்பட்டது. இதனால் சீனப் பொருட்கள் தடையின்றி இந்தியாவுக்கு வரும் என்பதால் மக்களின் கருத்துகளைக் கேட்டபிறகே எந்த முடிவும் எடுக்க முடியும் என்று மோடி தெரிவித்தார். உற்பத்தித் துறையில் இணைந்து செயல்படுவது குறித்தும் பேசினர்.

சீனாவின் 70-வது ஆண்டு தேசிய தினம் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் 2022-ல் இந்தி யாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கி றோம். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வுகளைப் பயன்படுத்தி இருநாடுகளுக்கும் இடையே சுற்று லாவை மேம்படுத்துவது குறித்தும், இந்திய சீன மக்களிடையே உறவை பலப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித் தனர்.

தமிழகத்துக்கும் சீனத்துக்கும் பல்லவர் காலம் முதல் இருந்து வரும் கலாச்சாரம், வர்த்தகத் தொடர்புகள் குறித்து இருவரும் விரிவாக பேசினர். மாமல்லபுரத்துக்கும் சீனாவின் துறைமுக நகரமான பிஜியானுக்கும் இடையே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தக, கலாச்சாரத் தொடர்புகள் இருந்துள்ளன. பிஜியான் நகரில் 13-ம் நூற்றாண்டில் தமிழர்களால் சிவன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான தடயங்கள் அங்குள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. லட்சுமியுடன் விஷ்ணு இருக்கும் சிலைகளும் உள்ளன. இதுபற்றி பேசியபோது பிஜியான் நகருக்குச் சென்ற அனுபவத்தை ஜின்பிங் பகிர்ந்துள்ளார்.

இந்த பேச்சின் முடிவில் தமிழகத் துக்கும் பிஜியான் நகருக்கும் இடையே மீண்டும் வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்துவது குறித்தும் அங்குள்ள தமிழ் கோயில் கள் குறித்தும் ஆய்வு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. சீனாவுக்கு ஜென் புத்த மதத்தை கொண்டுச் சென்ற போதிதர்மர் தமிழகத்தில் இருந்து சென்றவர் என்று கூறப்படுகிறது. இதுதொடர் பாகவும் இருவரும் பேசினர்.

இரு நாடுகளும் சில பிரச்சினை களில் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன. காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள் நாட்டு விவகாரம் என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம். எனவே, காஷ்மீர் பிரச்சினை குறித்து இரு தலைவர்களும் எதுவும் பேசவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு சீன அதிபரை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து ஜின்பிங்கிடம் மோடி கேட்டறிந்தார். ஆனால், இதுகுறித்து விரிவாகப் பேசப்படவில்லை.

ராஜதந்திர விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல் படுவது, தகவல் தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி ஆகிய துறை களில் ஏற்றுமதி வாய்ப்புகள், பருவ நிலை மாற்றத்தால் உலகம் எதிர் கொண்டுவரும் சவால்கள், பயங்கர வாதம், அடிப்படைவாதத்தை எதிர் கொள்வது உள்ளிட்ட உலகம் தழுவிய பிரச்சினைகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் இருவரும் பேசினர்.எல்லைப் பிரச் சினை, எல்லையில் அமைதியை உறுதி செய்வது குறித்தும் இரு தலைவர்களும் பேசினர்.

இந்தியா - சீனா 2-வது முறைசாரா உச்சி மாநாடு பாரம்பரியமான இடத்தில் நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பிரதமர் மோடி, மாமல்லபுரத்தை தேர்வு செய்தார். இதனை சீன அதிபரும் ஒப்புக் கொண்டார். இரு தலைவர்களின் சந்திப்புக்கு தமிழக அரசு மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளது பாராட்டுக்குரியது. சீன அதிபரை வரவேற்க கலைநிகழ்ச்சிகளோடு, ஆங்காங்கே பொதுமக்களும் வரவேற்க ஏற்பாடு செய்தது அவரை பெரிதும் கவர்ந்தது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியா - சீனா 3-வது முறை சாரா மாநாட்டுக்கு சீனா வருமாறு ஜின்பிங் விடுத்த அழைப்பை மோடி ஏற்றுக் கொண்டார். இந்தியா - சீனா இடையே அடிக்கடி பேச்சு நடைபெற வேண்டும் என்று இரு தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர்.

இவ்வாறு வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே கூறினார்.சீனாவில் தமிழர்கள் கட்டிய கோயில்கள் குறித்து ஆய்வு செய்ய முடிவு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x