Published : 12 Oct 2019 09:16 PM
Last Updated : 12 Oct 2019 09:16 PM

நான் முதலமைச்சரானது  விபத்து என்கிறார் ஆனால் ஸ்டாலின் தலைவரானதுதான் விபத்து: எடப்பாடி பழனிசாமி பேச்சு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.முத்தமிழ்செல்வனை ஆதரித்து, முண்டியம்பாக்கம், ராதாபுரம் மற்றும் விக்கிரவாண்டி சந்திப்பு ஆகிய இடங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் இன்று (12.10.2019) பொது மக்களிடம் வாக்குச் சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பிரச்சாரம் செய்யும் இடங்களில் என்னை விபத்தால் முதலமைச்சர் ஆகி உள்ளார் என கூறுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 122 சட்டமன்ற உறுப்பினர்களின் பேராதரவுடன் நான் முதலமைச்சராக உள்ளேன். ஆனால் ஸ்டாலின் தி.மு.க-வின் தலைவராக ஆனதுதான் விபத்து என்று சொல்ல வேண்டும்.

அவரது தந்தை கருணாநிதி அவர்கள் சுமார் இரண்டாண்டு காலமாக பேசமுடியாத சூழ்நிலையில் கூட தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு விட்டுத்தரவில்லை. அவரது மறைவுக்குப் பிறகுதான் ஸ்டாலினால் கட்சித் தலைவராக முடிந்தது என்பதை அவர் மறந்து விடக் கூடாது. நான் 1989ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து கட்சிக்காக உழைத்ததின் பயனாக இன்று இந்த நிலைக்கு வந்துள்ளேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அனைவரும் தங்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்பதை ஸ்டாலின் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். நான் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது இந்த அரசு 10 நாள் தான் நீடிக்கும், 6 மாதம் தான் நீடிக்கும், 1 ஆண்டுதான் நீடிக்கும் என தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால் இந்த அரசு மக்களின் பேராதரவோடு 2 ஆண்டுகள் 8 மாதம் சிறப்பான ஆட்சியை வழங்கியுள்ளது.

எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்ட இந்த இயக்கம், ஜெயலலிதாவினால் கட்டிக்காக்கப்பட்டு, அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்படக் கூடிய இயக்கமாக இன்று உருவெடுத்துள்ளது. ஸ்டாலின் பொய் வாக்குறுதிகளை மக்களிடம் அளித்து அதன் மூலம் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்து விடலாம் என்ற கனவு, ஒருபோதும் நடக்காது. இந்த ஆட்சியை யாராலும், ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. அம்மா அவர்கள் மக்களுக்காக என்னென்ன நலத்திட்டங்களை கொண்டு வந்தார்களோ, அந்த திட்டங்கள் அனைத்தும் இன்றும் அம்மாவுடைய அரசு வழங்கி வருகிறது.

ஸ்டாலின் அ.தி.மு.க. அரசு ஊழல் அரசு என கூறிவருகிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு அரசு தான் தி.மு.க. தி.மு.க ஆட்சியின் போது அமைச்சர்களாக இருந்த பல முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. அதை மறைத்து ஸ்டாலின் அ.தி.மு.க-வை பார்த்து ஊழல் ஆட்சி என கூறிவருவது மிகுந்த வேடிக்கையாக உள்ளது. முன்னாள்

அமைச்சர்களான துரைமுருகன், ஏ.வ.வேலு, பொன்முடி ஆகியோர்களுக்கு கல்லூரிகள் உள்ளது. இந்த கல்லூரிகள் கட்டுவதற்கு அவர்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது. இந்த பணம் எல்லாம் மக்களின் வரிப்பணத்தில் ஊழல் செய்து பெறப்பட்டதாகும். இவர்கள் என்ன, டாடா பிர்லா குடும்பத்தைச் சார்ந்தவர்களா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 2021லும் அ.இ.அ.தி.மு.க தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x