

தமிழ்நாட்டில் பல தொழில் நிறுவனங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண்பது அவசியம் என்று வலியுறுத்தினார்.
“சீனா அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தக்கூடிய சந்தர்ப்பம் அமைந்திருப்பது நல்ல வரவேற்கத் தகுந்த செய்தி. தமிழ்நாட்டில் இருக்கின்ற தொழிற்சாலைகளெல்லாம் மூடப்பட்டுக் கொண்டிருக்கும் இத்தகைய சூழ்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் முதலாளிகளைக் கொண்டு வந்து மூலதனம் செய்ய வைக்கிறேன் என்று சொன்னால் அந்த அளவுக்கு வெளிநாட்டில் உள்ள முதலாளிகள் இளித்தவாயர்களோ விவரம் தெரியாதவர்களோ அல்ல.
உள்நாட்டில் மூடப்படுகின்ற தொழிற்சாலைகள் ஏன் மூடப்படுகின்றன இதற்கு என்ன மாற்று ஏற்பாடு? அதற்கு என்ன கட்டமைப்பு வசதிகளைச் செய்து தரவேண்டும் என்பதைப் பற்றி ஆய்வு செயது உள்நாட்டு தொழில் வளங்களைப் பாதுகாக்க நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”
இவ்வாறு பேசினார் பாலகிருஷ்ணன்.