Published : 12 Oct 2019 07:29 PM
Last Updated : 12 Oct 2019 07:29 PM

மதுரையில் வீட்டு உபயோக மின் மீட்டர்களுக்கு தட்டுப்பாடு: பழுதடைந்ததை மாற்றாமல் தோராயமாக மின்கட்டணம் வசூலிப்பதால் மக்கள் பாதிப்பு

மதுரை

வீடுகளில் மின் மீட்டர்கள் பழுதனால் அதைமாற்றிதராமல், சராசரி தொகை வசூல் செய்யப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 3 கோடிக்கு மேலான மின் நுகர்வோர்கள் உள்ளனர். மின்சார வாரியம், கடந்த சில ஆண்டிற்கு முன் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் என்றும் மின் தொடரமைப்புக் கழகம் என்றும் இரண்டாக பிரிக்கப்பட்டது.

இதில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பணி பொது மக்களிடம் நேரடியாகத் தொடர்புடையதாகும். இவர்கள், பொது மக்களுக்கு மின்சாரம் தொடர்பான அனைத்து விதமான சேவைகளையும் வழங்கி வருகின்றனர்.

மின்சாரத்தை விநியோகிப்பது, நுகர்வோரது வீட்டில் ஏற்படும் மின் தடங்கலை சரிசெய்வது, மின் தொடர்களில் ஏற்படும் தடங்கல், மற்றும் மின் தடை சரி செய்வது, மின் கட்டணம் செலுத்தாத மின் இணைப்புகளை மின் துண்டிப்பு செய்வது, பழுதடைந்த மின் மீட்டர்களுக்கு பதிலாக புதிய மின் மீட்டர் பொருத்துவது மற்றும் மின்மாற்றி, மின் தொடர் புதிதாக அமைப்பது, பராமரிப்பது, இரவுப்பணி, விடுமுறைநாள் பணி, அவசரப் பணி உள்பட இன்னும் பல பணிகளை மேற்கொள்கின்றனர்.

தற்போது மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வீட்டு உபயோக மின் மீட்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
புதிதாக வீடுகட்டுவோர், இணைப்புவேண்டி விண்ணப்பிக்கும்போது, மின் மீட்டர்இல்லாததால் மின்இணைப்பு உடனடியாக வழங்கப்படவில்லை.
அதுபோல், வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்பாட்டில் உள்ள மின் மீட்டர் பழுதடைந்தால், உடனடியாக மாற்றிதருவது கிடையாது.

அதற்கு பதிலாக கடந்தமுறை எந்த கட்டணம் வசூலிக்கப்பட்டதோ, அதே தொகையே தோரயமாக தொடர்ந்து வசூலிக்கப்படுகிறது. மின் மீட்டர் பழுதான மாதம் அதிகமாக மின்சாரம் உபயோகித்து, அடுத்துவரும் மாதங்கள் மின் உபயோகத்தை குறைத்து இருந்தாலும் மின் கட்டணமாக அதே தொகையை செலுத்த வேண்டி உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர் ஹக்கீம் கூறியதாவது:

"மின் மீட்டர் பழுதடைந்து, புதிய மீன் மீட்டர் பொருத்தவும், பழுதுபார்க்கவும் மின்வாரிய அலவலகத்தில் கடிதம் எழுதி கொடுத்தாலும் ஒரு மாதம், 2 மாதம், 3 மாதமாகியும் மாற்று மீட்டர் வருவதில்லை. மின் கணக்கீடு செய்ய வருவோரும்முந்தைய மாதங்களை கணக்கீட்டு சராசரி மின்கட்டணம் நிர்ணயித்து, சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் மின் மீட்டர் பழுது குறித்து தகவலும் தெரிவிக்கின்றனர்.

ஆனால், மின்வாரிய ஊழியர்கள், மாற்று மீட்டர் பொருத்தவில்லை. கேட்டால் மின்மீட்டர் தட்டுப்பாடு நாங்கள் என்ன செய்வோம் என்று கடமையை தட்டிக்கழிக்கின்றனர். அப்படியே மின் மீட்டர்கள் வந்தாலும் ஒர்க் ஆர்டர் வரவில்லை, ஆட்கள் இல்லை என்று காரணங்களை சொல்லி தப்பிக்கின்றனர்.

அவர்கள் மீது அவர்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளிடம் புகார் செய்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. மின்வாரிய தொழில்நுட்ப அதிகாரிகள், ஊழியர்கள், ஏதாவது ஒரு சங்கத்தில் இருப்பதால் அவர்கள் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கைஎடுக்க தயக்கம் காட்டுகின்றனர். அதனால், மின் மீட்டர் ஓடாமல் பொதுமக்கள், மின்சாரத்தை குறைவாகப் பயன்படுத்தினாலும் கூடுதல் மின் கட்டணம் செலுத்தும் அவலம் தொடர்கிறது.

மின்உபயோகத்தைகணக்கிடுவதில்உள்ளநடைமுறைசிக்கலைகளையவும்,பழுதடைந்த மின்மீட்டர்களுக்கு புதிய மின் மீட்டர்கள் பொருத்தவும் தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் மின்மீட்டர் பழுது கண்டறியும் மையம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். மின் மீட்டர் பழுது கண்டறியப்பட்டால், பொதுமக்களை அலைக்கழிக்காமல் உடனடியாக மாற்று மின்மீட்டர் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x