

திருப்புவனம்
நிலம் கொடுத்த விவசாயிகள், அகழாய்வில் பணிபுரிந்த தொழிலாளர்களை அரசு கவுரவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழ்வாய்வை அவர் இன்று பார்வையிட்டார். சு.வெங்கடேசன் எம்.பி., ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா உடனிருந்தனர்.
பிறகு கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்கள் பிரமிப்பூட்டுவதாக உள்ளன. இது தமிழர்கள் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் நாகரிகத்தை உணர்த்துகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தோடு கீழடி வைகைக் கரை நாகரிகம் ஒத்துப்போகிறது.
அந்தகாலக் கட்டத்தில் விவசாயம் மட்டுமல்ல தொழில்களிலும் சிறந்து விளங்கியுள்ளனர். இந்த ஆய்வு இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடர வேண்டும். அகழ்வாய்விற்கு தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்தி, உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
நிலம் வழங்கிய விவசாயிகள், அகழாய்வில் பணிபுரிந்த தொழிலாளர்களை தமிழக அரசு பாராட்டி கவுரவிக்க வேண்டும். தமிழக தொல்லியல்துறையினர், ஆராய்ச்சி மாணவர்கள் அர்ப்பணிப்போடு ஈடுபட்டுள்ளனர். அவர்களை மனதாரப் பாராட்டுகிறோம். விரைவில் தமிழக அரசு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.
ஐந்தாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் நிறைவு பெறுகிறது என அறிவித்தது சரிதான். அதே நேரத்தில் அகழாய்வுப் பணிக்காக தோண்டிய குழிகளையும், கண்டறிந்த பொருட்களையும் மக்கள் பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார்.