பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக; மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ஆர்.நல்லகண்ணு

ஆர்.நல்லகண்ணு: கோப்புப்படம்
ஆர்.நல்லகண்ணு: கோப்புப்படம்
Updated on
1 min read

விழுப்புரம்

பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக அரசு உள்ளது என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து நேற்று (அக்.11) மாலை காணையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு பிரச்சாரம் மேற்கொண்டார்.

முன்னதாக அவர் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"அதிமுக ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரிகளின் ஆதிக்கம் நிலைத்துக்கொண்டிருக்கிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மக்கள் தாங்க முடியாத அளவுக்கு பல மடங்கு சொத்து வரியை உயர்த்தி விட்டனர். கிராமப்புறங்களில் குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுபோல் எந்தவொரு அடிப்படை வளர்ச்சி பணிகளும் நடைபெறாததால் கிராம மக்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.

மேலும் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் காவிரியில் இருந்து வந்த தண்ணீர் கூட கடைமடைக்கு வரவில்லை. இதற்கு காரணம் குடிமராமத்து பணிகள் முறையாக நடக்கவில்லை. சிறந்த நிர்வாகமாக தமிழக அரசு செயல்படவில்லை.

தமிழ்மொழி பாடமாக்கப்பட வேண்டும் என்பதை தவிர்த்து இந்தியை திணிக்கிறார்கள். இதை எதிர்த்து தமிழக அரசு போராடுவதில்லை. அடுத்து பகவத் கீதையை பொறியியல் கல்லூரிகளில் பாடமாக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். எதிர்ப்பு வந்தபிறகு விருப்ப பாடமாக படிக்கலாம் என்று சொல்கிறார்கள். பாஜக என்னென்ன சொல்கிறதோ அதை அப்படியே தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக அரசு உள்ளது. இதனால் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

நந்தன் கால்வாய் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பல கோடி ரூபாய் நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும்," என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in