

வீண் செலவுகளை கட்டுப்படுத்தாவிட்டால், கிரீஸ் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைதான் தமிழகத்துக்கு ஏற்படும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி இன்று வெளியிட்ட அறிக்கையில், ''ஐரோப்பிய நாடான கிரீஸ், பன்னாட்டு வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கிட்டத்தட்ட இத்தகைய சூழலை நோக்கியே தமிழகம் சென்றுகொண்டிருக்கிறது.
கிரீஸ் நாட்டின் பரப்பளவு 1.30 லட்சம் சதுர கி.மீ. தமிழகத்தின் பரப்பளவு 1.31 லட்சம் சதுர கி.மீ. தமிழக மக்கள்தொகை கிரீஸ் நாட்டைவிட 7 மடங்கு அதிகம். கிரீஸ் ஒட்டுமொத்த உற்பத்தி ரூ.13.16 லட்சம் கோடி. தமிழக ஒட்டுமொத்த உற்பத்தி ரூ.10.60 லட்சம் கோடி. தனிநபர் வருமானம் கிரீஸைவிட தமிழகத்தில் பல மடங்கு குறைவு.
தமிழக அரசின் மொத்த கடன் சுமை ரூ. 4 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. வட்டியாக மட்டும் தமிழக அரசு ரூ.35 ஆயிரம் கோடி செலுத்துகிறது. இதுதவிர இலவசங்கள், மானியங்களுக்காக ரூ.49,068 கோடி, ஓய்வூதியத்துக்காக ரூ.51,741 கோடி செலவிடப்படுகிறது. தமிழக அரசின் ஒட்டுமொத்த வருவாயும் இதற்கே செலவிடப்படுவதால் மற்ற திட்டங்களுக்கு கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் நேரடி கடன் சுமை கடந்த 10 ஆண்டுகளில் 239 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிமுக அரசு மட்டும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது.
இந்நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் கிரீஸுக்கு ஏற்பட்ட நிலைதான் தமிழகத்துக்கும் ஏற்படும். எனவே, வீண் செலவுகளை கட்டுப்படுத்தி, வருவாயை பெருக்கும், நிர்வாகத் திறன் கொண்ட அரசு அமைக்கப்பட வேண்டும். அப்படியொரு அரசை அமைத்து கடன் சுமையில் இருந்து தமிழகத்தை மீட்க பாமக போராடும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.