Published : 12 Oct 2019 11:23 AM
Last Updated : 12 Oct 2019 11:23 AM

தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை: ஜி.கே.வாசன் கண்டனம்

சென்னை

தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துச் சென்றதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (அக்.12) வெளியிட்ட அறிக்கையில், "தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் ஒரு படகிலும், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் ஒரு படகிலும் இரண்டு நாட்களுக்கு முன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டனர். மீனவர்களின் இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்தனர். இந்தச் செய்தியைக் கேட்ட தஞ்சாவூர் மற்றும் நாகை மாவட்ட கடற்பகுதி மீனவர்கள் பதட்டம் அடைந்தனர். மேலும் மீனவர்களின் கைது நடவடிக்கையால் மீனவர்களின் குடும்பங்கள் பொருளாதாரம் ஈட்ட முடியாமல், மீளாத்துயரத்தில் இருக்கிறார்கள்.

இலங்கை கடற்படையினர் கடந்த வாரம் தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை கைது செய்து சென்றனர். மேலும் நேற்று முன்தினம் 7 மீனவர்களைக் கைது செய்தனர். இப்படி தமிழக மீனவர்களைத் தொடர்ந்து இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் நிலையற்றதாக இருக்கிறது.

தற்போது இலங்கையின் வசம் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்டு கொண்டுவருவதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் அச்சத்தோடு மீன்பிடிக்கச் செல்வதும், கைது செய்யப்படுவதும், மீன்பிடி சாதனங்களை இழப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு நல்ல தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த மீனவர்களின் எதிர்பார்ப்பாகும்.

தமிழக மீனவர்களின் நிம்மதியான மீன்பிடித் தொழிலுக்கும், தொடர் வாழ்வாதாரத்திற்கும் நல்ல சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய கட்டாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.

எனவே, மத்திய அரசு தமிழக மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்று இலங்கை அரசுடன் உடனடிப் பேச்சுவார்த்தையை நடத்தி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்.

தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் நிரந்த சுமுகத் தீர்வு ஏற்படுத்தி தர மத்திய, மாநில அரசுகளை தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்," என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x