Published : 12 Oct 2019 10:12 AM
Last Updated : 12 Oct 2019 10:12 AM

கோவளம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்த பிரதமர் மோடி

கோவளம்

கோவளம் கடற்கரையில் குவிந்திருந்த பிளாஸ்டிக் குப்பைகளை பிரதமர் மோடி இன்று அதிகாலை தனி ஆளாக இருந்து சேகரித்தார்.

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான 2-ம் கட்ட அதிகாரபூர்வமற்ற சந்திப்பு மாமல்லபுரத்தில் நடந்த வருகிறது. இதற்காக நேற்று சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு தமிழக அரசு, மத்திய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாலையில் மாமல்லபுரம் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி வரவேற்று, அங்குள்ள பல்லவர் கால சிற்பங்கள், கோயில்களைக் காண்பித்து விளக்கினார். அதன்பின் இரு தலைவர்களும் 150 நிமிடங்கள் வரை பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சு நடத்தி கலைநிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர். 2-வது நாளாக இரு தலைவர்களும் இன்று மீண்டும் கோவளத்தில் சந்தித்துப் பேசுகின்றனர்.

கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் தங்கியுள்ள மோடி, கடற்கரையில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை இன்று வெளியிட்டுள்ளார். அதில் கோவளத்தில் உள்ள கடற்கரையில் இன்று காலை பிரதமர் மோடி தனி ஆளாக பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்த வீடியோ அதில் வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்தப் பிரச்சாரத்தை சமீபத்தில் ஐ.நா. பொதுக்குழுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி முன்வைத்தார்.

அனைத்து மக்களும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி மக்களுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை இன்று பிரதமர் மோடி 30 நிமிடங்கள் வரை சேகரித்தார். கையில் ஒரு பிளாஸ்டிக் பையை வைத்துக்கொண்டு, கையுறை கூட அணியாமல் கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்களை பிரதமர் மோடி சேகரித்தார்.

அதிகாலை நேரத்தில் கடற்கரையில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட பிரதமர் மோடி, அதன்பின் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு கடற்கரையைச் சுத்தப்படுத்தினார்.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடி வீடியோ பதிவிட்டு அதில் கூறுகையில், " மாமல்லபுரம் கடற்கரையில் இன்று காலை 30 நிமிடங்கள் வரை குப்பைகளைச் சேகரித்தேன். நான் சேகரித்த குப்பைகள் அனைத்தையும் ஓட்டல் பணியாளர் ஜெயராஜ் என்பவரிடம் கொடுத்தேன். பொது இடங்கள் சுத்தமாகவும், குப்பைகள் இன்றியும் இருப்பது அவசியம். நாமும் உடல்நலத்துடன், ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x