பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பில் இன்று என்ன பேசப்படும்?

தமிழகத்தின் பாரம்பரிய வேட்டி சட்டையில் பிரதமர் மோடியுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்|  படம்: ஏஎன்ஐ
தமிழகத்தின் பாரம்பரிய வேட்டி சட்டையில் பிரதமர் மோடியுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்| படம்: ஏஎன்ஐ
Updated on
2 min read

மாமல்லபுரம்

பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான இன்றைய 2-ம் நாள் சந்திப்பில் வர்த்தகம், முதலீடு, வர்த்தகப் பற்றாக்குறை, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பது தொடர்பான முக்கியப் பேச்சுகள் இடம் பெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே அதிகாரபூர்வமற்ற 2-வது கட்டச் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இந்தச் சந்திப்புக்காக சென்னைக்கு நேற்று வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு தமிழக அரசு, மத்திய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தின் பாரம்பரிய கலைகளின் நடனம், நாதஸ்வரம் இசை ஆகியவற்றுடன் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாலையில் மாமல்லபுரம் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்றார். இருவரும் கடற்கரையில் உள்ள கோயில்கள், சிலைகள் ஆகியவற்றைக் கண்டுகளித்தனர். சிலைகள் குறித்த விவரங்களை சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி விளக்கிக் கூறினார். அதன்பின் கடற்கரைக் கோயில் பகுதியில் இரவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கலை நிகழ்ச்சிகளை இரு தலைவர்களும் கண்டு ரசித்தனர்.

முதல் நாளில் தீவிரவாதம், தீவிரவாத ஒழிப்பில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுதல் ஆகியவை குறித்து இரு தலைவர்களும் பேசியதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் 2-ம் நாளில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் 40 நிமிடங்கள் சந்தித்துப் பேச உள்ளார்கள். இந்தச் சந்திப்புக்குப் பின் ஜி ஜின்பிங்கிற்கு மதிய விருந்து அளிக்கிறார் பிரதமர் மோடி. அதன்பின் சீன அதிபர் ஜி ஜின்பிங் பிற்பகலில் நேபாளம் புறப்படுகிறார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரமதர் மோடி இடையே இன்று நடக்கும் சந்திப்பில் என்ன விதமான விஷயங்கள் ஆலோசிக்கப்படும் என்பது குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே கூறுகையில், "பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேற்று 150 நிமிடங்கள் வரை பேசினார்கள். தீவிரவாதம் குறித்தும், தீவிரவாதத்தைக் கூட்டாக எதிர்கொள்வது குறித்தும் ஆலோசித்தார்கள்.

இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து நாளை (சனிக்கிழமை) இரு தலைவர்களும் ஆலோசிப்பார்கள். இந்தியாவில் முதலீட்டை அதிகப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி பேசக்கூடும். சீனாவில் உள்ள நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு விடுப்பார்.

இந்தியா -சீனா இடையே வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதைக் குறைப்பது தொடர்பாகவும் முதலீட்டை அதிகப்படுத்துவது தொடர்பாக பேச்சில் கவனம் செலுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.


ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in