Published : 12 Oct 2019 09:06 AM
Last Updated : 12 Oct 2019 09:06 AM

மேற்கு மண்டல காவல்துறையில் மகளிர் காவல் நிலையங்களில் ‘குடும்ப நல ஆலோசனை மையம்’- இரு தரப்புக்கும் இடையே சமரசப்படுத்தி தீர்வு

டி.ஜி.ரகுபதி

கோவை 

மேற்கு மண்டல காவல்துறையில், மகளிர் காவல் நிலையங்களில் ‘குடும்ப நல ஆலோசனை மையம்’ திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

மேற்கு மண்டல காவல் துறையில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களும், 230-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களும் உள்ளது. இங்கு அடிதடி, தகராறு, இரு தரப்பு மோதல், திருட்டு, வழிப்பறி, ஜேப்படி போன்ற பல பிரச்சினைகள் தொடர்பாக, தினசரி புகார்கள் பெறப்படுகின்றன. இது தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தவிர, குடும்ப விவகாரங்களான கணவன் - மனைவி இடையேயான தகராறு, மாமியார் - மருமகள் இடையே சரியான புரிதல் இல்லாததால் ஏற்படும் பிரச்சினைகள், வரதட்சணை கொடுமை, இரு வீட்டார், உறவினர்களிடையே ஏற்படும் பிரச்சினைகள், காதலித்து திருமணம் ஆசை கூறி ஏமாற்றுதல் போன்ற விவகாரங்கள் தொடர்பான புகார்களும் காவல்நிலையங்களில் பெறப்படுகின்றன.

சம்பந்தப்பட்டவர்களின் எதிர்கா லத்தை கருத்தில் கொண்டு, குடும்ப விவ காரம் சார்ந்த புகார்கள் மீது உடனடி நட வடிக்கை எடுக்காமல், இரு தரப்பையும் சமரசப்படுத்தும் நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்கின்றனர்.

இதற்காக, மேற்கு மண்டல காவல் துறைக்குட்பட்ட மகளிர் காவல் நிலை யங்களில் ‘குடும்ப நல ஆலோசனை மையம்’ என்ற திட்டம் கடந்த சில வாரங் களுக்கு முன்னர் தொடங்கப்பட்டுள்ளது.

முன்னரே, மகளிர் காவல் நிலையங் களில் உள்ள கவுன்சலிங் அளிக்கும் திட்டத்தை மேம்படுத்தி இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கு மண்டல காவல்துறை தலை வர் கே.பெரியய்யா கூறும் போது, ‘‘தற் போதைய காலத்தில், குடும்ப விவகாரங் கள் தொடர்பான புகார்கள் அதிகம் வருகின்றன. வழக்குப்பதிவதால் மட்டும், குடும்ப விவகார பிரச்சினை தொடர்பான புகார்களை சரி செய்ய முடியாது. தகுந்த ஆலோசனை அளிப்பதன் மூலமும் சரி செய்யலாம். அதற்காக தான் மேற்கு மண்டல மாவட்டங்களில் உள்ள மகளிர் காவல் நிலையங்களில் ‘குடும்ப நல ஆலோசனை மையம்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்காக, அந்தந்த மகளிர் காவல் நிலையங்களால், அந்த காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக் கும், சமூக நலன் சார்ந்த மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், மனநல ஆலோசகர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த ஆலோசகர்கள், வல்லுநர்களின் பெயர், முகவரி, அலைபேசி எண் அவர்கள் ஒப்புதலுடன் சேகரித்து வைக்கப்பட்டு இருக்கும். குடும்ப விவகாரங்கள் தொடர் பாக புகார் வந்தால், காவல்துறையினர் முதலில் விசாரிப்பர். பின்னர், அந்த புகா ருக்கு தகுந்த ஆலோசகர்களை வரவ ழைப்பர். அந்த ஆலோசகர், மகளிர் காவல் நிலையத்தில் வைத்து இரு தரப் பினருக்கும் ஆலோசனை வழங்குவார்.

அவர்களுக்கு இடையே உள்ள இடை வெளியை நீக்கி, சண்டையை போக்கி சமாதானப்படுத்துவர். முடிவில், இரு தரப்பினரும் சமாதானமாகி செல்வர். மேற்கு மண்டல மாவட்டங்களில் ஒவ் வொரு மகளிர் காவல் நிலையத்திலும், மாதத்துக்கு சராசரியாக 15 முதல் 20 எண் ணிக்கையிலான குடும்ப நல விவகாரங் கள் தொடர்பான புகார்கள் பெறப்படுகின் றன. இதில், தகுந்தவற்றுக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டு சரி செய்யப்படுகிறது,’’ என்றார்.

போக்சோ விழிப்புணர்வு தீவிரம்

மேற்கு மண்டல காவல்துறையில் போக்சோ வழக்கு, பலாத்காரம், பெண் வன்கொடுமை என பெண்களுக்கு எதி ரான குற்றங்கள் தொடர்பாக கடந் தாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 281 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இதுவே, நடப்பாண்டு மேற்கண்ட காலகட்டத்தில் 322 வழக்கு கள் பதியப்பட்டுள்ளன. காவல் துறை யினரின் விழிப்புணர்வால் பாதிக்கப்பட்ட வர்கள் தயக்கமின்றி புகார்களை அளிக் கின்றனர்.

மேற்கு மண்டல காவல்துறை தலை வர் கே.பெரியய்யா கூறும் போது, ‘‘பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்ட நடவடிக்கை, விழிப்புணர்வு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப் படுகிறது. 18 வயதுக்கு குறைவான பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க, மகளிர் காவல் நிலையங்களில் ‘டீன்-ஏஜ் கவுன்சலிங் திட்டம்’ செயல் படுத்தப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, மாவட்டம் வாரியாக ‘மொபைல் குழு’ மூலமாக கிராமங்களில் பெண் களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுகிறது,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x