

திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால், சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி கடந்த ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 2 மாதங்களாக வறண்ட நிலையில் இருந்து வந்தது. கடந்த மாதம் 18-ம் தேதி இரவு முதல், சில நாட்கள் அவ்வப் போது பெய்த மழையால் பூண்டி ஏரியின் நீர் இருப்பு அதிகரித்தது.
இந்நிலையில், தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி ஆந்திர அரசு, சென்னை குடிநீர் தேவைக் காக கண்டலேறு அணையில் இருந்து, பூண்டி ஏரிக்கு செப். 25 முதல் கிருஷ்ணா நீரை திறந்து வருகிறது. தொடக்கத்தில் விநாடிக்கு 500 கன அடி திறக்கப்பட்டு, பிறகு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
கண்டலேறு அணைப் பகுதியில் கட்டுமானப் பணி உள்ளிட்ட காரணங்களால், நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,400 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணா நீர் வருகை காரணமாகவும் பூண்டி ஏரியின் நீர் இருப்பு அதிகரித்துள்ளது. 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவுக் கொண்ட பூண்டி ஏரியில், நேற்று காலை நிலவரப்படி 1,011 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஆகவே, சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து, நேற்று காலை 10 மணி அளவில் புழல் ஏரிக்கு விநாடிக்கு 250 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
கொசஸ்தலை ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் பழனிசாமி, உதவி செயற்பொறியாளர் கவுரிசங்கர், பூண்டி உதவி பொறியாளர் ரமேஷ், சென்னை குடிநீர் வாரிய 2-வது மண்டல செயற்பொறியாளர் ஜெயப்பிரகாசம், கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்ட கோட்டம்-1-ன் உதவி செயற்பொறியாளர் சுப்பாராவ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று, மலர் தூவி பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்குச் செல்லும் இணைப்புக் கால்வாய் ஷட்டரை திறந்து வைத்தனர்.