கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் மீண்டும் எதிர்ப்பு: பதற்றமான சூழல் காரணமாக போலீஸ் குவிப்பு

கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் மீண்டும் எதிர்ப்பு: பதற்றமான சூழல் காரணமாக போலீஸ் குவிப்பு
Updated on
2 min read

கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத் திட்டப் பணிக்காக கண்ணன்கோட்டையில் நிலம் கையகப்படுத்த மீண்டும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள கண்ணன்கோட்டை, தேர்வாய் ஏரிகளை இணைத்து, 330 கோடி ரூபாய் செலவில், 1252.47 ஏக்கர் பரப்பளவில் நீர்த்தேக்கம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. சென்னைக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்க கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீரை தேக்கி வைப்பதற்காக இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளது.

இதற்காக அரசு புறம்போக்கு, வனத்துறை மற்றும் விவசாயிகளின் பட்டா நிலங்களை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது. நீர்த்தேக்கத் துக்காக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்ட 800.65 ஏக்கரில், 473.44 ஏக்கருக்கான இடைக்கால நிவாரணத்தை 475 விவசாயிகள் பெற்றுள்ளனர். மீதமுள்ள நிலங் களுக்கான ஆவணங்களை அதி காரிகளிடம் விவசாயிகள் அளிக் காததால், 55.37 ஏக்கர் நிலங்களுக்கு 56 விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய இடைக்கால நிவாரணம் வருவாய்த் துறையிடம் உள்ளது.

சில நிர்வாக பிரச்சினைகள் காரணமாக இடைக்கால நிவாரணம் வழங்க முடியாத 271.84 ஏக்கருக்கு சொந்தமான 208 விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய இடைக்கால நிவாரணம் சிவில் கோர்ட் டெபாசிட்டில் உள்ளது.

இந்நிலையில், நீர்த்தேக்கத்துக் காக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களில் 46 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த ஆண்டு தள்ளுபடியானது.

இதனிடையே நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியானதை அடுத்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்ணன்கோட்டையில் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணி யில் கடந்த ஆண்டு ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், கையகப்படுத்தும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியருடனான பேச்சு வார்த்தையில் ‘நெல் அறுவடை முடிந்த பிறகு நிலம் கையகப் படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்’ என முடிவு எடுக்கப்பட்டன.

அதன்படி அறுவடை முடிந்த தால் நேற்று பொக்லைன் சகிதம் கண்ணன்கோட்டைக்கு பொதுப் பணித் துறை அதிகாரிகள் வந்தனர். நிலங்களை சமன்படுத்தி பணிகளை தொடங்க முயன்றனர்.

இதனை அறிந்த கண்ணன் கோட்டை விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு, ‘இடைக் கால நிவாரணம் அனைத்து விவசாயிகளுக்கும் அளிக்கப்படாத நிலையில் நிலத்தை கையகப் படுத்தக் கூடாது’ எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிறகு, மாவட்ட ஆட்சியர், பொன் னேரி கோட்டாட்சியர், நீர்த்தேக்கத் திட்டத்துக்கான நிலம் எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் உள் ளிட்ட வருவாய்த் துறை அதிகாரி கள், பொதுப்பணித்துறை அதிகாரி கள், விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துளசிநாராயணன் உள்ளிட்டோருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதில், சிவில் கோர்ட் டெபாசிட் டில் உள்ள 271.84 ஏக்கருக்கு 208 விவசாயிகளுக்கான இடைக்கால நிவாரணத்தை இன்று லோக் அதாலத் சிறப்பு நீதிமன்ற முகாம் நடத்தி வழங்கப்படும் எனவும், அதன் பிறகு, நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இருப்பினும், கண்ணன் கோட்டையில் பதற்றமான சூழல் நிலவுவதால், 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in