

சென்னை
மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் நடைபெறவுள்ள சந்திப்புக்காக சென்னை வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, தமிழகத்தின் பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட உள்ளன.
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே அதிகாரபூர்வமற்ற 2-வது கட்டச் சந்திப்பு இன்று (அக்டோபர் 11) சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
இதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங், தனி விமானத்தில் இன்று நண்பகல் 2 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும், தமிழக முறைப்படி பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் ஜி ஜின்பிங்கை வரவேற்று ஏராளமான கலைஞர்கள் நடன நிகழ்ச்சி நடத்தினர். பரத நாட்டியம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட நடனங்களும், மேளதாளம், நாதஸ்வரம் இசை முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜி ஜின்பிங் வருகையையொட்டி, சென்னை நகரில் மத்திய அரசும், தமிழக அரசும் பல்வேறு விதமான சிறப்பு ஏற்பாடுகளையும், தீவிரமான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்துள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து பிரத்யேக கார் மூலம் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்குச் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங், மாலையில் அங்கிருந்து புறப்பட்டு மாமல்லபுரம் சென்று பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார். இன்று மாலை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், ஜி ஜின்பிங்கும் அர்ஜுனன் தவம், பஞ்ச ரதங்கள், கடற்கரைக் கோயில் ஆகிய 3 இடங்களைப் பார்வையிட உள்ளனர்.
மேலும், கலாஷேத்ரா சார்பில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சியை இருவரும் கண்டு களிக்கின்றனர்.
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் சீன அதிபர் ஜி ஜிபிங்கிற்கு, பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் ஏராளமான இந்திய உணவுகள் இடம் பெறுகின்றன.
இந்த உணவு வகைகளில் தென்னிந்திய உணவு வகைகளுக்கு, குறிப்பாகத் தமிழக உணவுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. தக்காளி ரசம், அரைத்துவிட்ட சாம்பார், கடலை குருமா, கவனரிசி அல்வா போன்றவையும், செட்டிநாடு முதல் காரைக்குடி உணவு வகைகளும் பரிமாறப்பட உள்ளது.
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு, மொத்தம் 6 மணி நேரம் நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு சந்திப்பும் சுமார் 40 நிமிடங்கள் வரை நடக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த அதிகாரபூர்வமற்ற சந்திப்பில், இரு தலைவர்களும் பிராந்திய, சர்வதேச விவகாரங்கள், பிரச்சினைகள், எல்லைப்புற சிக்கல்கள், வர்த்தகம், இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து அதிகம் பேசக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
குறிப்பாக, சோயா பீன்ஸ், பாசுமதி அல்லாத அரிசி வகைகள் ஏற்றுமதியை அதிகரித்தல், தீவிரவாதம், தீவிரவாத ஒழிப்பு, தீவிரவாத நிதியளிப்பு ஆகியவை குறித்தும் பேசப்படலாம் எனத் தெரிகிறது.
நாளை பிஷர்மேன் கோவ் ரிசார்ட்டில் இரு தலைவர்களும் ஒருமுறை சந்தித்துப் பேசுகின்றனர். அந்தச் சந்திப்பு முடிந்தபின், நண்பகல் உணவை முடித்துக்கொண்டு சீனப் பிரதமர் ஜி ஜின்பிங், 12.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படுகிறார்.
ஏஎன்ஐ