Last Updated : 11 Oct, 2019 01:09 PM

 

Published : 11 Oct 2019 01:09 PM
Last Updated : 11 Oct 2019 01:09 PM

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப்படும் 27,509 ஓலைச்சுவடிகள், 19988 காகித சுவடிகள்: உயர் நீதிமன்றத்தில் தகவல்

மதுரை

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, மராத்தி, இந்தி மொழிகளில் எழுதப்பட்ட 27,509 ஓலைச்சுவடிகளும், சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட 19,988 காகித சுவடிகளும் பாதுகாக்கப்பட்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக ராமநாதபுரம் வழக்கறிஞர் திருமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதில் தஞ்சையில் அமைந்துள்ள சரஸ்வதி மஹால் நூலகம் ஆசியாவிலேயே மிகவும் பழமையான நூலகம். இங்கு அரிய பல நூல்கள், ஓலைச்சுவடிகள் உள்ளன. வரலாற்று ஆய்வாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் சரஸ்வதி மஹால் நூலகம் அறிவுக்களஞ்சியமாக உள்ளது.

இங்கு 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓலைச்சுவடிகள் உள்ளன. 7000 தலைப்புகளில் இலக்கியம், மருத்துவம் சார்ந்த தகவல்கள் மணிப்பிரவா நடையில் ஓலைச்சுவடிகளில் உள்ளன.

ஓலைச்சுவடிகள் மர அலமாரிகளில் உள்ளன. இதனால் அவைகள் சேமதமடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அண்மையில் குஜராத் வதேரா பல்கலைக்கழகத்தில் ஓலைச்சுவடிகள் கணிணிமயமாக்கப்பட்டது. அதேபோல் சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகளை கணிணிமயமாக்கி, அவற்றை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அழகுமணி வாதிட்டார்.
அப்போது சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நூலகர் சுதர்சன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது:

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, மராத்தி, இந்தி மொழிகளில் எழுதப்பட்ட 27509 ஓலைச்சுவடிகளும், சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட 19988 காகித சுவடிகளும் உள்ளன. இவற்றை கணிணிமயமாக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை 2014-ல் ரூ.7.5லட்சம் நிதி ஒதுக்கியது. இந்த நிதியில் ஓலைச்சுவாடிகள், காகித சுவடிகளை கணிணிமயமாக்கும் பணி 13.3.2015-ல் தொடங்கியது. இப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

7,86,354 பக்கங்கள் கொண்ட 4241 தமிழ் ஓலைச்சுவடிகள் உள்ளன. இவற்றில் 3,66,354 பக்கங்கள் கொண்ட 2054 ஓலைச்சுவடிகள் மட்டும் இதுவரை கணிணிமயமாக்கப்பட்டுள்ளது.

சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட 10,87,784 பக்கங்கள் கொண்ட 19228 ஓலைச்சுவடிகளும், 13,19,708 பக்கங்கள் கொண்ட 19988 காகித சுவடிகளும் உள்ளன. இதில் முறையே 4936 ஓலைச்சுவடிகள், 18640 காகித சுவடிகள் இதுவரை கணிணிமயமாக்கப்பட்டுள்ளது.
இது தவிர இதுவரை 834 தெலுங்கு ஓலைச்சுவடிகள், 3149 மராத்தி ஓலைச்சுவடிகள், 57 இந்தி ஓலைச்சுவடிகளும் கணிணிமயமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து சரஸ்வதி மகாலில் உள்ள ஓலைச்சுவடிகளை கணிணிமயமாக்கும் பணி தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு அடுத்த விசாரணையை அக். 30-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x