

சென்னை
சீன அதிபர் தங்கும் ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டல் மற்றும் விமான நிலையத்தை திடீரென முற்றுகையிட்ட 11 திபெத்தியர்கள் அவரது வருகையை எதிர்த்து கோஷமிட்டனர். அவர்கள் ஐவரையும் போலீஸார் கைது செய்தனர்.
சீன அதிபர் ஜிஜின்பிங் 2 நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னை கிண்டி ஐடிசி சோழா ஓட்டலில் தங்கும் அவர் அங்கிருந்து சாலை மார்கமாக மாமல்லபுரம் சென்று பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அங்கு இரவு உணவு உண்ட பின் இரவு சோழா ஓட்டலுக்கு திரும்பி பின் நாளை காலை மீண்டும் பிரதமர் மற்றும் முக்கிய பிரதிநிதிகளை சந்திக்கிறார்.
நாளை மதியம் சென்னையிலிருந்து நேபாள் புறப்பட்டு செல்கிறார். பிரதமர், சீன அதிபர் என இரண்டு பெரும் தலைவர்கள் வருவதால் சென்னை, காஞ்சிபுரத்தில் 20,000-க்கும் மேற்பட்ட போலீஸார், மத்திய பாதுகாப்புப்படை, சீன பாதுகாப்புபடை என வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவுடன் இணைந்துள்ள திபெத்தை தனி நாடாக அறிவிக்கக்கோரி பல பத்தாண்டுகளாக திபெத்தியர்களில் ஒரு பிரிவினர் போராடி வருகின்றனர். தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் ஏராளமான திபெத்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது திபெத்தை தனி நாடாக அறிவிக்கக்கோரி இங்கு போராட்டம் நடத்துவார்கள்.
சீன அதிபர் வருவதை ஒட்டி அவர் வரும் நேரத்தில் அவருக்கு எதிராக திபெத்தியர்கள் போராட்டம் நடத்தக்கூடாது என்பதில் போலீஸார், மத்திய உளவுப்பிரிவினர் வெகு ஜாக்கிரதையாக உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனி திபெத் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் சீன அதிபர் வரும் நேரத்தில் போராட்டம் நடத்தவந்த 8 திபெத் மாணவர்களை சேலையூரில் போலீஸார் வளைத்து பிடித்து கைது செய்தனர். இவர்களுக்கு உதவியதாக இந்துஸ்தான் பல்கலைகழக ஆங்கில பேராசிரியரான ஒரு திபெத்தியரும் மத்திய உளவுத்துறையின் தகவலின்பேரில் போலீஸார் கைது செய்தனர்.
மிகுந்த பாதுகாப்பு வளையத்துக்குள் சென்னை கொண்டுவரப்பட்ட நிலையில் அதிபர் தங்கும் ஓட்டல் மற்றும் விமான நிலையத்துக்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை அதிபர் வருவதற்கு முன் நட்சத்திர ஓட்டல் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டுவிட்டுச் சென்றார்.
அவர் சென்ற சிறிது நேரத்தில் மூன்று திபெத்திய பெண்கள் எம்ஜிஆர் பல்கலைகழகம் வழியாக கூட்டத்தினருடன் ஊடுருவி பத்திரிகையாளர்கள் நிற்கும் இடத்துக்கு சற்று தள்ளி நின்றுக்கொண்டனர்.சிறிது நேரம் கழித்து இரண்டு திபத்தியர்கள் அங்கு வந்தனர். வாசல்முன் கிழக்கு மண்டல இணை ஆணையர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
அப்போது திடீரென இரண்டு திபெத்தியர்களும் பாக்கெட்டிலிருந்த தங்கள் இயக்க கொடிகளை கையில் எடுத்து சீன அதிபருக்கு எதிராக கோஷமிட்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார் உடனடியாக அவர்களை வளைத்துப்பிடித்து கொடிகளை பிடுங்கி கைது செய்தனர். அப்போது கூட்டத்தோடு கூட்டமாக இருந்த 3 திபெத்திய பெண்களைப் பார்த்த பெண் போலீஸார் அவர்களையும் மடக்கிப்பிடித்தனர்.
இதேப்போன்று விமான நிலையத்தில் முற்றுகையிட பெங்களூருவிலிருந்து விமானத்தில் வந்த திபெத்திய மாணவர்கள் 6 பேரை போலீஸார் மடக்கிப்பிடித்தனர். மொத்தம் 6 பெண்கள் 5 ஆண்கள் உட்பட 11 பேர் கைது
ஓட்டல் அருகே 7 அடுக்கு பாதுகாப்பு உள்ள நிலையிலும் கூட்டத்தோடு கூட்டமாக வந்து கோஷமிட்ட 5 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
சற்று நேரத்தில் அங்கு மீண்டும் வந்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.