

புதுச்சேரி
புதுச்சேரியில் வாக்குக்குப் பணம் வாங்கினால் லஞ்சம் வாங்கிய வீடு என ஸ்டிக்கர் ஒட்ட தன்னார்வக் குழு தயாராகி வருகிறது. பண விநியோகத்தைக் கண்காணிக்க 25 நபர்கள் கொண்ட உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களையும் நியமித்துள்ளனர்.
புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கட்சிகள் பணம் தர முயற்சிகள் நடக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் போதிய நடவடிக்கைகள் எடுத்தாலும் பண விநியோகம் நடப்பதாகவும் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியிலுள்ள '5-வது தூண் மக்கள் இயக்கத்தினர்' 'லஞ்சம் வாங்கிய வீடு' என்கிற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
சக்திவேல்
இதுதொடர்பாக இயக்கத்தின் நிர்வாகி சக்திவேல் கூறுகையில், "வாக்குக்கு லஞ்சம் கொடுப்பதும் குற்றம், பெறுவதும் குற்றம். நடைபெறவுள்ள காமராஜர் நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில், ஜனநாயகத்தைக் காக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வாக்குக்கு லஞ்சம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்துவோம். வாக்குக்கு லஞ்சம் வாங்க விருப்பம் இல்லாதவர்கள் வீட்டின் கதவில் 'லஞ்சம் பெறமாட்டோம்' என்று ஸ்டிக்கர் ஒட்டுவோம்.
வாக்குக்குப் பணம் பெற்றால் 'லஞ்சம் வாங்கிய வீடு' என்று ஸ்டிக்கரை அந்த வீட்டில் ஒட்ட உள்ளோம். இதன் மூலம் மக்கள் வாக்குக்கு லஞ்சம் பெறுவதை பெரும் குற்றமாக உணர்வார்கள்.
வாக்குக்குப் பணம் தரப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க 25 நபர்கள் கொண்ட 'அக்னி' உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களை நியமித்துள்ளோம்," என்று தெரிவித்தார்.
செ.ஞானபிரகாஷ்