

சீன அதிபர் வருகையை ஒட்டி சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்களை காவல்துறை செய்துள்ளதால் அதன் வெளிப்பாடாக சென்னையில் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் சூழ்நிலை அறிந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கவேண்டாம் என போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் சென்னை வருகையை முன்னிட்டு, 11.10.2019 மற்றும் 12.10.2019 ஆகிய தேதிகளில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை வரும் சீன அதிபர் விமான நிலையத்திலிருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வந்து தங்குகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக வாகன அணிவகுப்புடன் மாமல்லபுரம் செல்கிறார்.
2 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்வில் தாம்பரத்திலிருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் பல்லாவரத்திலிருந்து மதுரவாயல் நோக்கி திருப்பி விடப்படும், சென்னையிலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் வாகனங்கள் மதுரவாயல் வழியாக சென்று பல்லாவரம் ரேடியல் ரோடை அடையலாம். சோழிங்கநல்லூரிலிருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் பெரும்பாக்கம் வழியாக திருப்பி அனுப்பப்படும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இன்று சீன அதிபர் வருவதை ஒட்டி ஒத்திகை பார்க்கப்பட்டது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போதுவரை இந்த நெரிசல் தீரவில்லை. சைதாப்பேட்டை, கிண்டி, மத்திய கைலாஷ் உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
நாளையும்(11/10) நாளை மறுநாளும் அப்பகுதியில் உள்ள பள்ளிகள், தனியார் நிறுவனங்கள் நிலை என்னவென்பது தெரியாது. விடுமுறை இல்லை, ஆனால் வாகனங்களுக்கு அனுமதி இல்லாததால் தங்கள் பயணத்தை பொதுமக்கள் தீர்மானித்துக்கொள்ளவும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலால் பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வெள்ளி, சனிக்கிழமைகள் விடுமுறை நாட்கள் என்பதால் இன்னும் ஒரு வாரமே இடையில் உள்ள நிலையில் வீக் என்ட் பர்சேஸுக்காக பொதுமக்கள் வெளியில் செல்லும் வாய்ப்பு உண்டு.
ஆனால் இந்த இரண்டு நாட்களும் சென்னையின் முக்கிய நுழைவு பகுதியான கிண்டி, மத்திய கைலாஷ் உள்ளிட்டப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் காரணமாக சென்னையின் ஒருபகுதி மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்க வாய்ப்புள்ளது.
சென்னையில் ஒரு இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் அதன் பிரதிபலிப்பாக மற்ற பகுதிகளிலும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் இதையொட்டி தங்கள் பயணத்தை வகுத்துக்கொண்டால் பிரச்சினை இல்லை.
2 நாட்களுக்கான போக்குவரத்து மாற்றம் குறித்து போலீஸாரின் அறிவிப்பு:
“11.10.2019 மற்றும் 12.10.2019 ஆகிய தேதிகளில் மேற்படி மிக முக்கிய பிரமுகரின் சாலை வழி பயணத்தின் போது, ஜி.எஸ்.டி சாலை (சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை), அண்ணா சாலை (கத்திபாரா முதல் சின்ன மலை வரை), சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து போக்குவரத்து தாமதமாக செல்ல வாய்ப்புள்ளது.
எனவே மேற்கண்ட சாலைகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் முன்னேற்பாடு செய்து தங்கள் பயணத்திட்டங்களையும், வழித்தடங்களையும் அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இலகுரக சரக்கு வாகனங்கள், டேங்கர் லாரிகள் போன்ற வாகனங்கள் 11.10.2019 அன்று காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மற்றும் 12.10.2019 அன்று காலை காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மேற்படி சாலைகளில் அனுமதிக்கப்படமாட்டாது.
மேலும் மேற்படி மிக முக்கிய பிரமுகரின் சாலை வழி பயணத்தின் போது கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைபடுத்தப்படும்.
11.10.2019 அன்று, 12.30 மணி முதல் 2.00 மணி வரை, பெருங்களத்தூரிலிருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜி, எஸ்.டி சாலை நோக்கி அனுமதிக்கப்படாமல் "0" பாயின்ட் சந்திப்பிலிருந்து மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
'மேலும் சென்னை தென்பகுதியிலிருந்து வடக்கு பகுதிகளுக்கு வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் ரோடு வழியாக , குரோம்பேட்டை - தாம்பரம் வழியாக மதுரவாயல் புறவழிச்சாலையை பயன்படுத்தி செல்லலாம்.
மேலும் தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் சாலையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
11.10.2019 அன்று, 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஜி, எஸ்.டி சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் கத்திப்பாரா சந்திப்பிலிருந்து கிண்டி நோக்கி அனுமதிக்கப்படாமல், 100 அடி சாலை வழியாக செல்ல திருப்பிவிடப்படும்.
11.10.2019 அன்று, 2.00 மணி முதல் 9.00 மணி வரை, ராஜீவ் காந்தி சாலையில் (OMR) நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக செல்ல திருப்பிவிடப்படும். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
12.10.2019 அன்று, 07.30 மணி முதல் 2.00 மணி வரை, ராஜீவ் காந்தி சாலையில் (OMR) நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக செல்ல திருப்பிவிடப்படும். மேலும் 12.10.2019 அன்று, 07.00 மணி முதல் 1.30 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
தேசிய விருந்தினராக சென்னைக்கு வருகை புரியும் மிக முக்கிய பிரமுகரின் இந்தியப்பயணம் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் அமைந்திட பொதுமக்கள் காவல் துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.