

சென்னை
நாம் தான் மோடியை ஓட்டு போட்டு வரவேற்றோம். ஆனால் ‘Go Back Modi’ , ‘Go Back Modi’ என்றால் எப்படி? விமர்சனத்தை நேர்மையாக வைக்கவேண்டும் என்று கமல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வந்துள்ள உலக பேட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இதையடுத்து இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசியதாவது:
“இந்தியாவுக்கு வெற்றித்தேடித்தந்த வீராங்கனையை வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறோம். இங்கே அவருக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் அவர் பெயரில் வாய்ப்பில்லாத ஏழைக்குழந்தைகளுக்கான பயிற்சியை வியாபார நோக்கமில்லாமல் குழந்தைகளின் வாய்ப்புக்காக அவர் செய்ய வேண்டும். அதற்கான எந்த உதவி கேட்டாலும் நாங்கள் அவர்களுக்கு செய்யத்தயார்.
பி.வி.சிந்து அவர்கள் சம்பாதித்த பொருளையும், பெருமையையும் பங்கிட்டு கொடுக்க முடியாது. ஆனால் அவரது திறமையை அவர் ஒரு ஊக்கியாக பங்கிட்டு கொடுக்கலாம். அனைத்து நல்லக்காரியங்களிலும் அரசை எதிர்பார்க்க முடியாது”.
இவ்வாறு தெரிவித்த கமல் பின் செய்தியாளர்களின் கேள்விக்கு அளித்த பதில்:
சீன அதிபர் நாளை வருகிறார் உங்கள் கருத்து என்ன?
கண்டிப்பாக வரவேற்கிறோம். இரண்டு நாடுகள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவிலிருந்து பெரிய தலைவர் இங்கு வருகிறார். இரு பெருந்தலைவர்கள் இரண்டு தேசங்களுக்கு நன்மைப்பயக்கும் என்னென்ன முடிவுகளை, எந்த முடிவை எடுத்தாலும் அதை வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துவதில் இந்தியனாகவும், இந்திய சீன உறவை விரும்பும் உலக குடிமகனாகவும் வரவேற்கிறேன்.
சீன அதிபரிடம் வைக்கவேண்டியதாக உங்களது கோரிக்கை என்ன?
சீன அதிபரிடம் வைக்க வேண்டிய கோரிக்கையை எங்கள் பிரதமர் வைப்பார். அவருக்கு வைக்கவேண்டிய கோரிக்கைகளை, திட்டங்களை நமது பிரதமர் செய்வார், அவர் அதை திறம்பட செய்ய வாழ்த்துகள்.
பேனர் வேண்டாம் என்று சொல்லியும் சீன பிரதமர் வரும் நிகழ்வில் வைக்கப்படுகிறதே?
பேனர் வேண்டாம் என்று நான் சொல்ல மாட்டேன். அதை பலபேர் தவறாக புரிந்துக்கொண்டுள்ளனர். ஏனென்றால் நான் சினிமாக்காரன். பேனரை வைக்க சட்டப்பூர்வமான அனுமதிப்பெற்ற இடங்கள் உண்டு அங்கு வைக்கலாம். அதற்கு அனைத்து நகரங்களிலும் அனுமதி உண்டு, இடம் உண்டு.
ஆனால் அதைவிட்டுவிட்டு மற்ற இடங்களில் வைப்பதுதான் பிரச்சினை. அது நம்முடைய தேசத்தின் ஒழுக்கம், அதை சீன அதிபர் வரும்போது காட்டிக்கொண்டிருக்க முடியாது. அவரை கௌரவமாக வரவேற்று அனுப்பி வைப்பதுதான் சிறப்பு.
சீன அதிபர் வருகையை ஒட்டி எதிர்ப்புத்தெரிவித்த திபெத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரே?
அவர்களுக்குள் பல ஆண்டுகளாக பிரச்சினை உள்ளது. அதை தென் கோடியில் உள்ள நான் தலையிடக்கூடாது என்பது என் கருத்து.
'#GoBackModi' ஹாஷ்டேக் வருது என்ன கருத்தை அவர்கள் சொல்ல வருகிறார்கள்?
வா (COME) என்று சொல்லி வோட்டு போட்டதும் நாம் தான். வேலை செய்யவில்லை என்றால் அவரைப்பற்றி விமர்சனம் வைக்கலாம். 'Go Back Modi', கோ பேக் என்று சொன்னால் அவர் வராமலேயே போய்விட்டால் அப்புறம். பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. சொல்லவேண்டிய கருத்துக்களை, விமர்சனங்களை நாம் வைப்போம். அவங்க சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்தாலும் தைரியமாக கருத்தை முன்வைப்போம்.
ஆனால் அது நேர்மையாக இருக்கவேண்டும். அவரைப்பற்றிய விமர்சனங்கள் நேர்மையாக இருந்தால் நேர்மையான தலைவனாக அதை எப்படி ஏற்றுக்கொள்ளவேண்டுமோ அதை மோடி ஏற்றுக்கொள்வார். இவ்வாறு கமல்ஹாசன் பதிலளித்தார்.