Published : 10 Oct 2019 06:15 PM
Last Updated : 10 Oct 2019 06:15 PM

சீன அதிபர் வருகை : அதி நவீன கார்கள் பங்கேற்ற பாதுகாப்பு ஒத்திகை

சீன பிரதமர் சென்னை வருகையை ஒட்டி அவர் விமான நிலையத்திலிருந்து கிண்டி நட்சத்திர ஓட்டலுக்கு வரும் பாதையில் பாதுகாப்பு ஒத்திகை பார்க்கப்பட்டது. இதில் சீன அதிபரின் அதி நவீன கார்களும் இடம்பெற்றது.

சென்னை வரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங், பிரதமர் மோடியுடன் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகிறார். சென்னைக்கு விமானத்தில் வரும் சீன அதிபர் அங்கிருந்து நேராக கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலில் தங்குகிறார். சீன அதிபர் சென்னை விமான நிலையத்திலிருந்து அவரது பிரத்யோக அதிநவீன காரில் சோழா ஓட்டலுக்கு வருகிறார். பின்னர் மாமல்லபுரத்திற்கும் தனது காரிலேயே பயணம் செய்கிறார்.

இதற்காக அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள், அவரது பிரத்யோக கார் 'ஹாங்கி எல்5' ரக கார்கள் தனி விமானம் மூலம் சென்னை வந்தது. மொத்தம் 4 கார்களும், 100 பாதுகாப்பு அதிகாரிகளும் சென்னை வந்துள்ளனர்.

சீன பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலையத்திலிருந்து ஓட்டலுக்கு வரும் பாதையை ஆய்வு செய்தனர். பின்னர் ஹோட்டலுக்கு சென்று அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். பின்னர் மாமல்லபுரம் செல்லவுள்ளனர். சீன அதிபருக்கான பிரத்யோக கார் உலகப்புகழ் பெற்றது.

இதுவரை பதவி வகித்த அதிபர்கள் பாதுகாப்பு விஷயங்களில் கவனம் செலுத்தாத நிலையில் தற்போதைய அதிபர் தனது பாதுகாப்பு விஷயத்தில் தனி கவனம் செலுத்துகிறார். வானில் பயணம் செய்ய அமெரிக்க அதிபர்கள் ஏர்போர்ஸ் ஒன் என்கிற விமானத்தை பயன்படுத்துவதுபோன்று சீன அதிபரும் பிரத்யோக விமானத்தை தனக்காக பயன்படுத்துகிறார்.

அதேபோன்று சாலை மார்க்கமாக செல்ல, பொதுமக்கள் இடையே அணிவகுப்பில் செல்ல தனக்காக பிரத்யேகமாக தனியாக தயாரிக்கப்பட்ட காரை பயன்படுத்துகிறார். சீனாவின் 'ஹாங்கி எல்-5' ரக காரை பயன்படுத்துகிறார். உருவத்தில் மிகப்பெரியது, சொகுசானது. இதன் எடை 3,150 கிலோ. ஏறக்குறைய 20 அடி நீளமுடையது. 2 மீட்டர் அகலமும், 1.5 மீட்டர் உயரமும் கொண்டது. தரையில் இருந்து வீல் பேஸ் 3.4 மீட்டர் உயரம் கொண்டது.

அனைத்து வகை பாதுகாப்பு அம்சங்களும், உலகின் யாருடனும் பேசும் ஹாட்லைன் வசதியுடன் கூடிய அற்புதமான பாதுகாப்பு மிகுந்த கார் அது. சீன அதிபர் பயணிக்க மட்டும் தனியாக காரைத் தயாரிக்க சீனாவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான எப்ஏடபிள்யு(FAW) இத்தகைய கார்களை அதிபருக்காக தயாரிக்கிறது.

எப்ஏடபிள்யு நிறுவனம் கடந்த 1958-ம் ஆண்டு முதல் 'ஹாங்கி' ரக சொகுசுக் கார்களைத் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் மற்ற மாடல்கள் வெளிச்சந்தையில் விற்கப்பட்டாலும் இரண்டு மாடல்களை அரசுக்கு மட்டுமே தயாரிக்கிறது.

(Hongqi) 'ஹாங்கி எல்-5 ரக கார் சீன அதிபருக்காக உருவாக்கப்படுகிறது. வெளிச்சந்தையில் இவை விற்கப்படாது. 'ஹாங்கி' என்றால் சீன மொழியில் 'சிவப்புக் கொடி' என்று பொருள். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ காராக 'ஹாங்கி' தற்போதுவரை இருக்கிறது.

தற்போது அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் 'ஹாங்கி எல்-5 ' கார் 4-வது தலைமுறையினருக்குரிய கார். சென்னை கொண்டுவரப்பட்டுள்ள 'ஹாங்கி எல்-5 ' கார் இன்று நடத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்திகையில் பயன்படுத்தப்பட்டது. விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு வந்து போர்ட்டிகோவில் எங்கு நிறுத்துவது, பின்னர் எங்கு பார்க் செய்வது, உடன் வரும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் எவ்வாறு அணிவகுத்து செல்வது என்பது போன்ற ஒத்திகை நடத்தப்பட்டது.

அதிபருடன் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்து வரும். அனைத்திலும் பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸார் இருப்பார்கள். இதற்காக அதிபர் வந்தால் எப்படி செல்வார்களோ அதேபோன்று போக்குவரத்தை நிறுத்தி நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுத்தன.

சீன அதிபர் பாதுகாப்பாக வந்து மாமல்லபுரம் சென்று மீண்டும் ஹோட்டலுக்கு திரும்புவது, 12-ம் தேதி நிகழ்ச்சி முடிந்து 3 மணிக்கு மேல் அவர் நேபாள் புறப்பட்டுச் செல்வது வரையிலான பாதுகாப்பை சரியான முறையில் செய்வதற்காக சென்னை போலீஸார் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x