

மதுரை
கோயில் கற்சிற்பங்கள், ஓவியங்களை பாதுகாக்கக் கோரிய மனு தொடர்பாக தொல்லியல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோயிலில் உள்ள கற்சிலைகள் மிகுந்த சிறப்பு வாய்ந்தவை. இங்கிருக்கும் ஒவ்வொரு சிலையும் ஒவ்வொரு கதை சொல்லும். அவை அனைத்துமே பேசும் சிலைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீரபத்ரன், மன்மதன், ரதி, இலங்கை இளவரசி உள்ளிட்ட பல்வேறு சிலைகள் தத்ரூபமான அழகுடன் வடிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, ஆளுநர் பர்னாலா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, இத்தாலிய பேராசிரியர் கிராஸ் பைவ்டு ஆகியோர் இந்த சிலைகளின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். விஜயநகர அரசு மற்றும் அதன் கலைச் சிறப்பை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள இந்த சிற்பங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. மன்மதன் மற்றும் ரதியின் அழகிய சிற்பங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன.
பல்வேறு சிறப்பு பொருந்திய கிருஷ்ணாபுரம் கோயில் சிலைகள் தமிழரின் கலை ஆளுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவை. ஆகவே, கிருஷ்ணாபுரம் கோவில் சிலைகளை முறையாக சீரமைத்து பாதுகாக்கவும், அதன் சிறப்பை உணர்த்தும் வகையில் வழிகாட்டிகளை பணியமர்த்தவும், கோயிலை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கும் வகையில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்து வைக்கவும், புகைப்படம் எடுக்க அனுமதிக்கவும், சிலைகள் குறித்த குறிப்புகளையும், அவற்றின் வரலாற்று தகவல்களை தானியங்கி ஒலிப்பெருக்கிகள் மூலமாக கேட்கும் வகையிலும் ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும்.
மேலும், கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோயிலைப் போல திருப்புடைமருதூர், திருக்குறுங்குடி, களக்காடு ஆகிய பகுதி கோவில் கோபுரங்களில் உள்ள ஓவியங்கள், மரச்சிற்பங்களை பாதுகாத்து, பொதுமக்களின் பார்வைக்காக திறக்கவும் உத்தரவிட வேண்டும். நெல்லையப்பர் கோயில், களக்காடு சிவன் கோயில், திருக்குறுக்குடி பெருமாள் கோயில், கருவேலன்குளம் நடராசர் கோயில்களில் உள்ள சிலைகளையும் பாதுகாத்து பராமரிக்க உத்தரவிட வேண்டும்,"
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று (அக்.10) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடர்பாக தமிழக தொல்லியல்துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.