Last Updated : 10 Oct, 2019 05:17 PM

 

Published : 10 Oct 2019 05:17 PM
Last Updated : 10 Oct 2019 05:17 PM

திருவாவடுதுறை ஆதீன கோயில்களில் பண மோசடி புகார்: அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை தர உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வளாகம்: கோப்புப்படம்

மதுரை

திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உட்பட்ட கோயில்களில் பூஜைகளுக்கு பணம் வசூல் செய்வதில் மோசடி நடைபெறுவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உட்பட்ட திருவிடைமருதூர், மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி தோஷம் கழிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு நபர் ஒன்றுக்கு 550 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும் உபய வரவாக 100 ரூபாய் வசூலிக்கப்பட்டு அது கோயிலுக்கு செலுத்தப்படுகிறது. மேலும் பிரம்மஹத்தி தோஷத்துக்கான 550 ரூபாயில் 200 ரூபாய் கோயில் பங்காகவும், 350 ரூபாய் பூஜைக்காகவும் செலவு செய்யப்படுகிறது. இதில் சுமார் 2 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது.

இந்த மோசடி குறித்து விசாரிக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்,"

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று (அக்.10) விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் புகார் தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x