சீன அதிபர் வருகையால் சென்னை சுத்தமாகியுள்ளது: சுபஸ்ரீ வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து

உயிரிழந்த சுபஸ்ரீ: கோப்புப்படம்
உயிரிழந்த சுபஸ்ரீ: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

சீன அதிபர் வருகையால் சென்னை சுத்தமாகியுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சுபஸ்ரீயின் தந்தை ரவி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, “கடந்த மாதம் பல்லாவரம் துரைப்பாக்கம் நெடுஞ்சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற என் மகள் சுபஸ்ரீ மீது விழுந்தது. அதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் என் மகள் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துக்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம்.

அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை அகற்ற உயர் நீதிமன்ற உத்தரவை முறையாக அதிகாரிகள் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே தற்போது நடந்து வரும் விசாரணை அனைத்தையும் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்ற வேண்டும். சுபஸ்ரீயின் மரணத்துக்கு இழப்பீடாக தனது குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கவேண்டும்.

சட்ட விரோத பேனர்கள் வைக்கப்படுவதைத் தடுக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை, கடுமையான தண்டனை வழங்கும் விதமாக சட்டத்திருத்தம் கொண்டுவர அரசுக்கு உத்தரவிடவேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு இன்று (அக்.10) நீதிபதிகள் வைத்தியநாதன், சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், "சுபஸ்ரீ வழக்குக் குறித்த காவல்துறை விசாரணையை சென்னை காவல் ஆணையர் கண்கானிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் ஜெயகோபால் உள்ளிட்ட இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சம் இடைக்கால இழப்பீடு சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புக்குப் பின்னர் பேனர் வைக்க தமிழகத்தில் எந்த பகுதியிலும் அனுமதி வழங்கவில்லை," என தெரிவித்தார்.

சுபரீயின் தந்தை ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இவ்வழக்கில் சிறப்பு புலானாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும்," என கோரினார்.

அப்போது நீதிபதி வைத்தியநாதன், "சீன அதிபர் வருகையால் சென்னை சுத்தமாகி உள்ளது. மற்ற உலக தலைவர்கள் வந்தால் தமிழகமே சுத்தமாகிவிடும்," என தெரிவித்தார்.

இதன்பின்பு, பேனர் வழக்குகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளை பார்த்து விட்டு பின்னர் இந்த வழக்கு விசாரிக்கப்படும் எனக்கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in