மேடை, பந்தல், வரவேற்பு தோரணங்கள், ஒலிபெருக்கிகள் இல்லாமல் மக்களிடம் கலந்துரையாடி வாக்குசேகரிக்கும் கட்சிகள்: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சார உத்தி

மேடை, பந்தல், வரவேற்பு தோரணங்கள், ஒலிபெருக்கிகள் இல்லாமல் மக்களிடம் கலந்துரையாடி வாக்குசேகரிக்கும் கட்சிகள்: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சார உத்தி
Updated on
1 min read

அ. அருள்தாசன்

திருநெல்வேலி

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகளின் தலைவர்களும், தமிழக அமைச்சர்களும் கிராமங்கள் தோறும் சென்று, மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். மேடை, பந்தல், வரவேற்பு தோரணங்கள், ஒலிபெருக்கிகள் என்று எவ்வித செலவுகளுக்கும் வழிவகுக்காமல் நூதனமாக வாக்குசேகரிக்கும் காட்சிகள் தற்போது அரங்கேறி வருகின்றன.

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பணியில் அதிமுக வேட்பாளர் வெ.நாராயணனுக்கு ஆதரவு திரட்டும் பணியில், தமிழக அமைச்சர்களும், அதிமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் என்று பெரும்பட்டாளமே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

அமைச்சர்கள் முகாம்

தொகுதிக்குள்ளேயே அமைச்சர்களும், நிர்வாகிகளும் முகாமிட்டிருக்கிறார்கள். காலை, மாலை, இரவு என்று எந்நேரமும் தொகுதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இவர்கள் வலம்வந்து கொண்டிருக்கிறார்கள்.

இதுபோல், காங்கிரஸ் கட்சி வேட் பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து அக்கட்சி தலைவர்களும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

தீவிர வாக்குசேகரிப்பு

தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அடுத்தடுத்த நாட்களில் இத்தொகுதிக்கு வரவுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருக்கும் நிலையில் தொகுதியில் வாக்குசேகரிப்பும், பிரச்சாரமும் சூடுபிடித்திருக்கிறது.

திண்ணை பிரச்சாரம்

இத்தொகுதியில் கிராமப்புறங்கள் அதிகளவில் உள்ளாதாலோ என்னவோ, வாக்குசேகரிப்பில் திண்ணை பிரச்சார நடைமுறையை அதிமுகவும், திமுகவும் கையாண்டுள்ளன. கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள மரத்தடியிலோ, பொது இடங்களிலோ மக்களோடு மக்களாக அமர்ந்து தமிழக அமைச்சர்களும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் ஆதரவு கேட்கிறார்கள்.

கிராமங்களுக்கு இவர்கள் செல்லும் போது அங்குள்ள மக்களை ஓரிடத்தில் திரள வைப்பதுதான் அந்தந்த பகுதி கட்சி நிர்வாகிகளின் பொறுப்பு. அந்த பகுதியிலுள்ள நாற்காலிகளையோ, பெஞ்சுகளையோ எடுத்துப்போட்டு அதில்தான் கட்சித் தலைவர்கள் அமர்ந்து கொள்கிறார்கள். நிழலுக்கு பந்தலோ, இரவில் மின்விளக்குகளோ, மேடைகளோ, வரவேற்பு வளைவுகளோ, கொடித்தோரணங்கள் என்று எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்வதில்லை.

கிராமப்புற உணவகங்களில் தேநீர் அருந்துவதும், அங்குள்ள குழந்தைகளை கொஞ்சுவதும், செல்பி எடுக்க மக்களை அனுமதிப்பதும் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிராம மக்களை கட்சி தலைவர்களும், முக்கியஸ்தர்களும் நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிக்கும் நடைமுறையால் தேர்தலுக்கு வேட்பாளர் செலவிடும் தொகையில் மிச்சம் ஏற்படும். மக்களை நேரடியாக சந்திப்பதால் அவர்களது பிரச்சினைகளை எளிதில் தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

தேர்தல் பிரச்சாரம் என்றாலே பிரம்மாண்டம், செலவு என்ற நடைமுறைக்கு மாற்றாக மக்களோடு மக்களாக அமர்ந்து அவர்களது ஆதரவை பெற முயற்சிக்கும் கட்சியினரின் உத்திக்கு மக்களும் வரவேற்பு தெரிவிக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in