

அம்மா சிமென்ட் திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடி சிமென்ட் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு சிமென்ட்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அம்மா சிமென்ட் விற்பனைத் திட்டத்தின் மூலம், ஒரு மூட்டை சிமென்ட் ரூ.190-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமும், 470 கிட்டங்கிகளின் மூலமும் சிமென்ட் மூட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை ஏறக்குறைய 5.17 லட்சம் மெட்ரிக் டன் அதாவது 1 கோடி சிமென்ட் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் மூலம் 1,500 சதுர அடிகளுக்கு உள்பட்டு புதிய வீடு கட்டுபவர்களுக்கு 750 மூட்டைகளும், பழைய வீட்டை பழுது பார்த்து புதுப்பிக்க 10 முதல் 100 மூட்டைகளும் சிமென்ட் வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் அம்மா சிமென்ட் விற்பனை குறித்து மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்கு 1800-425-22000 என்ற கட்டணமில்லாத தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.