

சென்னை
தமிழக தலைமைச் செயலர் சண்முகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
போக்குவரத்துத் துறை செயல ராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் துயர் தணிப்பு ஆணையராகவும், எரி சக்தித் துறை செயலர் பி.சந்திர மோகன் போக்குவரத்துத் துறை செயலராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (டுபிட்கோ) மேலாண் இயக்குநராக இருந்த அசோக் டோங்ரே, சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இந்து சமய அறநிலையங்கள் துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த அபூர்வ வர்மா டுபிட்கோ மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கைவினைப் பொருள் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநர் பொறுப்பு கூடுதலாக தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் சந்தோஷ் பாபு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல், எரிசக்தித் துறை செயலர் பொறுப்பு விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் தீரஜ்குமார் வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட சார் ஆட்சியர் டி.ரத்னா அரியலூர் ஆட்சியராகவும், அரியலூர் ஆட்சியர் டி.ஜி.வினய் மதுரை மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.