

சேலம்
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து திடீரென இரு மடங்காக அதிரித்துள்ளதால், அணையின் நீர் மட்டம் சரிவில் இருந்து சற்று மீண்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 29-ம் தேதி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாக இருந்தது. அப்போது அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வரத்தும் இருந்தது. காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கான நீர் திறப்பு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்நிலையில், அன்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவில் சரிவு ஏற்படத் தொடங்கியது. இதன் காரணமாக, அணையின் நீர் மட்டம் கடந்த 30-ம் தேதி 119.84 அடியாகக் குறைந்தது. மேலும், அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 10,072 கனஅடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருந்ததால், அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறையத் தொடங்கியது. இதனிடையே, காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் தீவிரமடைந்ததாலும், அங்கு மழையளவு குறைந்ததாலும், காவிரியில் கூடுதலாக நீர் திறக்க வேண்டிய தேவை எழுந்தது.
இதையடுத்து, கடந்த 4-ம் தேதி முதல் டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியில் இருந்து, விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த சூழலில், அணைக்கு விநாடிக்கு 12,848 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 7-ம் தேதியன்று டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணைக்கு விநாடிக்கு 10,031 கனஅடி அளவுக்கு மட்டுமே நீர் வந்து கொண்டிருந்த நிலையில், நீர் திறப்பு இரு மடங்காக இருந்ததால், அணையின் நீர் மட்டம் 117.60 அடியாக குறைந்து காணப்பட்டது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்துகொண்டே வந்த நிலையில், நேற்று அணைக்கு விநாடிக்கு 10,396 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், காவிரியின் தமிழக- கர்நாடகா நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் இன்று (அக்.9) காலை திடீரென இரு மடங்காக அதிகரித்து, விநாடிக்கு 24,169 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக நீடிக்கும் நிலையில், அதனை விட அதிக அளவில் நீர்வரத்து ஏற்பட்டிருப்பதால், அணையின் நீர் மட்டம் தொடர் சரிவில் இருந்து மீளத் தொடங்கியுள்ளது. நேற்று 116.90 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் சற்று உயர்ந்து, இன்று காலை நிலவரப்படி 116.97 அடியாக காணப்பட்டது. அணையின் நீர் இருப்பு 88.718 டிஎம்சியாகவும், கால்வாய் பாசனத்துக்கான நீர் திறப்பு விநாடிக்கு 700 கனஅடியாகவும் இருந்தது.