Published : 09 Oct 2019 17:16 pm

Updated : 09 Oct 2019 17:16 pm

 

Published : 09 Oct 2019 05:16 PM
Last Updated : 09 Oct 2019 05:16 PM

'கின்னஸ்' முயற்சி; வண்ண வண்ணக் கடிதங்கள், மனுக்கள்: ‘பேனாமுனை’ சின்னபெருமாள் பேட்டி

paena-munai-chinnaperumal
இரா.சின்னபெருமாள்

மதுரை

கணினி, ஸ்மார்ட் போன் என கீபோர்டு டைப்பிங்குக்கு மாறிவிட்ட நம்மில் பலருக்கும் கல்லூரி படிப்புக்குப் பின் வடிவமாக எழுத வருவதே இல்லை. அதிகபட்சம் வங்கிக்குச் சென்றால் ஏதாவது எழுதுகிறோம். இல்லாவிட்டால் கையெழுத்தைத் தாண்டி எதுவுமே எழுதுவதில்லை. இப்படி எழுத்துருவை ஒரு காலகட்டத்திற்குப் பின் நாம் விலக்கி வைத்துவிடுகிறோம்.

பெரியவர்களின் நிலை இதுவென்றால் பள்ளிகளிலும் பக்கம் பக்கமாக எழுதும் முறை இப்போது இல்லை. பள்ளிக்கூட நோட்டு, வீட்டுப் பாட நோட்டு என்றெல்லாம் வகை வகை நோட்டுகள் இப்போது கிடையாது. விளைவு ஆங்காங்கே கையெழுத்து வகுப்புகள் எடுக்கும் மையங்கள் உருவாகியுள்ளன.

இப்படி வடிவமாக எழுதும் பழக்கம் மங்கிக் கொண்டுவரும் நிலையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயி, அரசுக்கு மக்கள் அனுப்பும் விண்ணப்பங்களை வடிவமாக எழுதியே பேனாமுனை என்ற அடைமொழியை தன் பெயருக்கு முன்னால் பெற்றிருக்கிறார்.

பேனாமுனை இரா.சின்னபெருமாள் அடிப்படையில் ஒரு சிறு விவசாயி. பிறந்து 9 வருடங்கள் பேச்சுவராமல் இருந்த அவர் தனது எண்ணங்களை அழகான வடிவத்தில் எழுத ஆரம்பித்தார். பின்னாளில் அதுவே அவருக்குப் பெருமை சேர்க்கும் என அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

தனது பயணம் குறித்தும் எதிர்காலக் கனவு குறித்தும் இந்து தமிழ் இணையதளத்துக்காக அவர் அளித்த பேட்டி..

உங்கள் பயணம் எப்படித் தொடங்கியது?

10-ம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு சரியாகப் பேச வராது. அதனாலேயே வகுப்பறையில் கடைசி வரிசையில் அமர்ந்து கொள்வேன். படிப்பை முடித்து விவசாயம் பார்க்கும்போது அவ்வளவாக நான் பேசவில்லை. 35 வயதுக்கு மேல்தான் சரளமாகப் பேச ஆரம்பித்தேன்.

ஆனால் பள்ளிக் காலத்திலேயே எனது எழுத்து அழகாக இருக்கும். எனது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் குப்பாங்கோனும் உயர் நிலைப் பள்ளி ஆசிரியர் சிவனுபாண்டியனும் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினர். இவர்கள்தான் என்னை கையெழுத்துப் போட்டிகளுக்கு அழைத்துச் செல்வர். அந்த ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தினால்தான் 10-ம் வகுப்பு வரை படித்தேன்.

இப்படியாக வாழ்க்கை சென்றுகொண்டிருந்தபோது கலைஞர் ஆட்சியில் எனக்கு மக்கள் நலப் பணியாளராக வேலை கிடைத்தது. ஏ.ஆர்.மங்கலம் ஊராட்சியில் எனக்கு பணி ஒதுக்கப்பட்டது. மக்கள் நலப் பணியாளர்களுக்கு இதுதான் வேலை என்று எந்தப் பணி வரையறையும் இல்லை. ஆனால், நான் மட்டும் அதை ஒரு பணியாகவே எடுத்துக்கொண்டேன். ஆனால், அந்த ஊராட்சியில் உள்ள விஷயங்கள் தொடர்பாக கடிதம் எழுதும் வேலையைச் செய்வேன். பஞ்சாயத்து அலுவலகம், மின்வாரியம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு மனுக்கள் எழுதுவேன். எனது கையெழுத்து அப்போதே பல அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது.

உங்கள் பயணத்தின் திருப்புமுனை என எதைக் கூறுவீர்கள்?

மனு எழுதுவதை மட்டுமே செய்து கொண்டிருந்த எனக்கு நண்பர் ஒருவர் மூலம் அப்போதைய
சபாநாயகர் தமிழ்க்குடிமகனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. விவசாயத்தைக் கவனித்துக்கொண்டே அவருக்கு தேவையானவற்றை எழுதித்தரும் வேலையை செய்துவந்தேன். ஜப்பானில் தமிழ்ச்சங்க விழாவிற்கு என்னை அழைத்துச் செல்வதாகக் கூறினார். ஆனால், விவசாயப் பணிகளால் அவர் சொன்னபடி என்னால் 1330 குறளையும் எழுத இயலவில்லை. அதனால் அந்த வாய்ப்பு நழுவிப்போனது. ஆனால், ஒரு நாள் உன் கையெழுத்தை இந்த உலகம் பேசும் என்றார். அவருடைய வார்த்தை எனக்கு ஊக்கமளித்தது. அதுதான் என் பயணத்தின் திருப்புமுனையும்கூட.

சரி மனு எழுதுதல், கடிதம் எழுதுவதில் எப்படி ஆர்வம் வந்தது..

உலகக் கடித தினம் குறித்து செய்தித்தாள்களில் வரும் செய்தியைப் படிக்கும்போதெல்லாம் எனக்கு மனதில் ஏதோ ஒரு மகிழ்ச்சி ஏற்படும். சிறுவயதில் பேச முடியாததால் எனக்கு எழுத்து மொழியாக இருந்ததாலும், பின்னாளில் கடிதம், மனுக்கள் எழுதும் ஆர்வம் இருந்துகொண்டே இருந்தது. காலப்போக்கில் கடிதம் எனும் வடிவம் அழிந்துவருவது வருத்தம் அளித்தது. அதனை மீட்டெடுக்கும் முயற்சியாகவே மனுக்கள், அரசுத் துறைகளுக்கு கடிதங்கள் எழுதுவதை ஆரம்பித்தேன்.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்களுக்கு மனு அனுப்பும் வேலையைத் தொடங்கினேன். எல்லா விஷயங்களுக்கும் கடிதம் மூலம் தீர்வு காணலாம் என்பது எனது ஆணித்தரமான நம்பிக்கை. அதே வேளையில் அதிகாரிகளை எரிச்சல்படுத்தாமல் அவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதைக் கூட நாசுக்காக செய்ய வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு எழுதுவேன். தவறைச் சுட்டிக்காட்டும்போதுகூட தங்கள் பதவிக்கு இது அழகல்ல என்று குறிப்பிடுவேனே தவிர எரிச்சலூட்டும் வகையில் எழுதமாட்டேன். என்னுடைய பல கடிதங்கள், மனுக்களுக்கு உடனே பதில் வந்துவிடும். சமூக நலக்கடிதங்களை விதவிதமான வடிவங்களில் பல்வேறு வண்ணங்களில் எழுதும் இந்தப் பணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

மக்கள் எப்படி உங்களை அனுகுகிறார்கள்?

நுகர்வோர் அமைப்பு, சமூக நல அமைப்பு, மக்கள் நலச் சங்கம், பெற்றோர் ஆசிரியர் கழகம், வாட்ஸ் அப் குரூப் என பல்வேறு வகையில் மக்கள் என்னுடன் தொடர்பு கொள்கின்றனர். சில நேரங்களில் செய்தித்தாளில் வரும் செய்திகளை மனுக்களாக்கி சம்பந்தப்பட்ட அரசுத் துறைக்கு அனுப்பிவைப்பேன்.

உங்கள் கடிதங்கள், மனுக்களின் சிறப்பு பற்றி சொல்லுங்கள்..

கடிதங்கள், மனுக்கள் எல்லோருமே அனுப்புகின்றனர். அன்றாடம் அரசுத்துறைகளுக்கு ஆயிரக்கணக்கான மனுக்கள் வருகின்றன. ஆனால், அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும். அதனாலேயே சிறப்பின கடிதங்களை எழுதுகிறேன். என்னுடைய எல்லாக் கடிதங்களிலும் 7 வகை வண்ணங்களைப் பயன்படுத்துவேன். மிகவும் அவசரமாக கவனம் ஈர்க்க வேண்டிய கடிதங்களை ஓவிய வடிவில் எழுதி அனுப்புவேன். தமிழக அரசு முத்திரை, அசோக சக்கரம் போன்ற வடிவங்களில் எழுதுவேன்.

8 வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கும் மனுவை 8 என்ற வடிவத்திலேயே எழுதி அனுப்பினேன். இப்படியாக பல்வேறு வடிவங்களிலும் கடிதங்கள், மனுக்களை எழுதி வருகிறேன். காவல்துறைக்குக் கூட மனுக்களை எழுதிவருகிறேன்.
கடந்த 2018 ஜனவரியில்தான், இந்த வண்ண வண்ணக் கடிதம் எழுதுவதைத் தொடங்கினேன். இதுவரை 2000 கடிதங்கள் எழுதிவிட்டேன். அன்றாடம் 8 கடிதங்கள் வரை எழுதுகிறேன். முக்கியமான கடிதங்களை நகல் எடுத்து ஆவணப்படுத்தி வைக்கிறேன்.

இக்கால இளைஞர்கள் மத்தியில் கையெழுத்து மீது இருக்கும் மதிப்பு, நாட்டம் பற்றி சொல்லுங்களேன்..

நவீன தொழில்நுட்பம் மாணவர்களையும் இளைஞர்களையும் சிறை வைத்துள்ளது. எல்லாத் தொடர்பையும் அவர்கள் தொழில்நுட்பத்தின் வாயிலாகவே செய்கின்றனர். எழுதும் பழக்கம் அருகி வருகிறது. எழுத்துக்கும் மூளை செயல் திறனுக்கும் தொடர்பு இருக்கிறது. அதை இக்கால இளைஞர்கள் இழந்து நிற்கின்றனர். கைப்பட எழுதும் ஒரு கடிதத்தில் உணர்வுகள் நிரம்பியிருக்கும். இரண்டாவதாக எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுத, பயிற்சி முக்கியம். கடிதப் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் மீட்டெடுக்க வேண்டும்.

பேனா எனும் கருவி மனிதகுலத்தை விட்டு விலகி வருவதாக உணர்கிறேன். அதை மையப்படுத்தி மீண்டும் கடிதம் என்ற பொக்கிஷத்தை சமுதாயத்துக்குக் கொண்டுவரவே இந்த ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளேன்.

நீங்கள் எழுதிய கடிதத்தில் சில குறிப்பிடத்தக்க வடிவங்களைக் குறிப்பிடுங்கள்..

பொள்ளாச்சி சம்பவம் நடந்தபோது இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனின் முறையில் மிகுந்த வேதனையுடன் சிவலிங்க வடிவில் ஒரு கடிதம் எழுதினேன். 8 வழிச் சாலை பிரச்சினையை மனுவாக எழுதும்போது 8 என்ற வடிவில் எழுதினேன். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய ஒரு மனுவை அந்த மாவட்டத்தின் வரைபடத்தில் எழுதியிருக்கிறேன்.

புத்தக வடிவம், சதுர வடிவம் போன்ற வடிவங்களிலும் எழுதியிருக்கிறேன். மழை நீர் சேகரிப்பை மக்களிடம் துரிதப்படுத்தி வேண்டி அனுப்பிய மனுவை அந்தக்கால மழைநீர் சேகரிப்புத் தொட்டி போன்ற வடிவத்தில் மனுவை எழுதினேன். ஆறுகளில் தடுப்பணை கட்டும் அவசியத்தை வழியுறுத்தி ஆற்றின் வடிவத்தை ஒத்திருக்குமாறு மனு எழுதினேன். ஆறுகளில் தடுப்பணை அமைப்பது இப்போது அரசாணையாகவே பிறப்பிக்கப்பட்டுவிட்டது. உலகம் சார்ந்த பிரச்சினையை உலக உருண்டை வடிவத்திலும், குடிநீர் பிரச்சினையை குடம் வடிவத்திலும், மீனவர்கள் பிரச்சினையை மீன் வடிவத்திலும், கோயிலுக்கு வரும் பக்தர்களின் கோரிக்கைகளை கோபுர வடிவிலும் எழுதி வருகிறேன்.

என்ன மாதிரியான பேனாக்களை தேர்வு செய்கிறீர்கள்?

நீல நிறத்துக்கு ஜெனட்டர் வகை பேனாக்களைப் பயன்படுத்துகிறேன். சிவப்பு, ஊதா யூனிபால் பேனாக்களையும், பெண்டல் என்ற வகை பேனாக்களையும் பயன்படுத்துகிறேன். டோராமேக்ஸ் என்ற கறுப்பு மை பேனாவைப் பயன்படுத்துகிறேன்.

உங்களின் அடுத்த இலக்கு என்ன?

கின்னஸ் சாதனையில் இடம்பெறுவதுதான் எனது இலக்கு. அதற்காக உலக நாடுகளின் வரைபடங்களில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதப் போகிறேன். அந்தப் பயணத்தைத் தொடங்கிவிட்டேன்.

எதற்காக காந்தியின் வாழ்க்கை வரலாற்றை தேர்வு செய்தீர்கள்?

உலக நாடுகளுக்கு இன்று மிக மிக அவசியமானது அமைதி. காந்தி அமைதியையும் அஹிம்சையையுமே போதித்தார். மிகுந்த பிரச்சினைக்குரிய நாட்டில் ஒரே ஒரு மணி நேரம் அமைதி நிலவினாலும்கூட அதற்கு அங்கு யாரேனும் ஒருவர் காந்தியின் அஹிம்சையைப் பின்பற்றியதே காரணமாக இருக்கும். அங்கு காந்தி வெற்றி பெறுகிறார். அதற்காகவே நான் காந்தியின் வரலாற்றைத் தேர்வு செய்தேன். காந்தி ஜெயந்தி அன்று அந்தப் பணியை ஆரம்பித்துவிட்டேன்.

'இந்து தமிழ் திசை' வெளியீடான என்றும் காந்தியை வாங்கியுள்ளேன். அதிலுள்ள தகவல்கள் எனது கின்னஸ் சாதனைக்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் ஓராண்டு கொண்டாடப்படும் என்று நமது பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். அந்த அறிவிப்பு வந்த நிலையில் நானும் எனது கின்னஸ் பயணத்தைத் தொடங்கிவிட்டேன். டிசம்பர் 7 தேசிய கடித தினத்தன்று இதனை கின்னஸ் சாதனைக்காக சமர்ப்பிக்க உள்ளேன்.

உங்கள் குடும்பத்தினரின் ஆதரவு எப்படி?

என் மனைவி எனக்கு மிகப்பெரிய பக்கபலம். பெரும்பாலும் இரவு நேரங்களில் கடிதங்களை எழுதிவிடுவேன். எனது எழுத்துகளுக்காகவே என் பகுதி மக்கள் என் மீது மிகுந்த மதிப்பு கொண்டுள்ளனர். நான் வசிக்கும் சுற்றுவட்டாரப் பகுதியில் எங்கு சென்றாலும் என்னை பேனாமுனை சின்னபெருமாள் என்று அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

என் தாய், தந்தைக்கு திருமணமான 10 வருடங்களுக்குப் பின்னரே நான் பிறந்தேன். பிள்ளை பிறந்தும் அம்மா, அப்பா என்று கூப்பிடவில்லையே என்ற ஏக்கம் எனது பெற்றோருக்கு 10 வருடம் தொடர்ந்தது. இப்போது நிறைய செய்தித்தாள்களில் ஊடகங்களில் என்னைப் பற்றி வரும் செய்திகளை அறிந்து என் தாய் பூரித்துப்போகிறார். என் அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரு தாய் சேயை அரவணைத்திருப்பது போன்ற வடிவில் எழுதுகிறேன். அம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் அந்த வடிவத்தைப் பார்த்து என் உணர்வைப் புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கையில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

- தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in


பேனாமுனை சின்னப்பெருமாள்கையெழுத்துவண்ணவண்ண கடிதங்கள்வடிவங்களில் கடிதங்கள்அரசு முத்திரைகளில் கடிதங்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author