Last Updated : 09 Oct, 2019 02:43 PM

 

Published : 09 Oct 2019 02:43 PM
Last Updated : 09 Oct 2019 02:43 PM

சுற்றுலாப் பயணி தவறவிட்ட பர்ஸ்: வனத்துறையிடம் ஒப்படைத்த சிறுவர்கள்

பெரியகுளம்

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலாபயணி தவறவிட்ட மணிபர்ஸை கண்டெடுத்த சிறுவர்கள் அதை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தைச் சேர்ந்த பாஸ்கர சேதுபதி (11) மற்றும் பிரதீப்சேதுபதி (8) இருவரும் லட்சுமிபுரம் ரேணுகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6 மற்றும் 3-ம் வகுப்பில் படித்து வருகின்றனர்.

இச்சிறுவர்கள் தனது அப்பா பாண்டியுடன் மோட்டார் சைக்கிளில் கும்பக்கரை அருவிக்கு நேற்று காலையில் சென்றுள்ளனர். அப்போது வழியில் மணிபர்ஸ் ஓன்று கிடந்துள்ளது.

இதனைப்பார்த்த சிறுவர்கள் அப்பாவின் வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு அதனை எடுத்து வந்தனர். அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது அது தங்களுடையது இல்லை என்று கூறியுள்ளனர்.

பின்பு பர்ஸை திறந்து பார்த்த போது பணம், மலேசியா காசு, பெட்ரோல் பில் இருந்துள்ளது. பில்லில் உள்ள எண்ணிற்குத் தொடர்பு கொண்டபோது வாகனம் குறித்த விவரம் தெரியாது என்று பதில் வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கும்பக்கரை வனக்காவலர் யேசுமணியிடம் இந்த பர்ஸை ஓப்படைத்துள்ளனர். அதனை பெற்றுக்கொண்ட அவர் சிறுவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பொருளை தவறவிட்டவர்கள் உரிய ஆவணத்துடன் தேவதானப்பட்டி வனச்சரகத்தில் தெரிவித்து பெற்றுக்கொள்ளலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x