Published : 09 Oct 2019 12:10 PM
Last Updated : 09 Oct 2019 12:10 PM

குடும்பப் பஞ்சாயத்தில் முதியவரைக் கத்தியால் குத்திய இளைஞர்: தவறுதலாக தன்னையே குத்திக்கொண்டதால் உயிரிழப்பு

சென்னை

குடும்பப் பஞ்சாயத்தில் நியாயம் கேட்ட முதியவரை கத்தியால் குத்திய இளைஞர், கத்தியால் தவறுதலாக தன்னையே குத்திக்கொண்டதால உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

வில்லிவாக்கத்தில் வசித்த மனோகரன் (26), கால் டாக்ஸி ஓட்டுநர். கடந்த ஓராண்டுக்கு முன் அயனாவரத்தைச் சேர்ந்த சரிதா (19) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். சரிதாவின் தாய் சம்பூர்ணம் திருவல்லிக்கேணியில் உள்ள பிரபல ஓட்டலில் துப்புரவுப் பணியாளராக உள்ளார்.

மனோகரன் மது, கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானவ என்றும் அதனால் போதையில் தினமும் மனைவியைத் தாக்குவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2 மாதத்துக்கு முன் சரிதா, கணவரைப் பிரிந்து தனது தாய்வீடான அயனாவரத்துக்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் அயனாவரத்தில் உள்ள மாமியார் வீட்டில் தனது மனைவியைத் தேடி வந்த மனோகரன் வீட்டில் நுழைந்து மனைவி சரிதாவின் அக்காவிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அவர் சத்தம்போடவே கையில் இருந்த கத்தியை எடுத்துக் காட்டி மிரட்டி விட்டுச் சென்றுள்ளார். இதனால் பயந்துபோன மாமியார் சம்பூர்ணம் அவசர போலீஸ் 100-க்கு போன் செய்து தகவலைக் கூறியுள்ளார்.

அங்கு வந்த அயனாவரம் போலீஸார் விசாரித்துவிட்டு, நாளை காலை காவல் நிலையம் வந்து புகார் கொடுங்கள் எனக் கூறிவிட்டு மனோகரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தனர். ஆனால் மனோகரன் போலீஸாரைத் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். காலையில் ஸ்டேஷனுக்கு வரவேண்டும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

போலீஸார் என்றும் பாராமல் மனோகரன் திட்டியதால் பயந்துபோன சம்பூரணம், தான் பணியாற்றும் ஓட்டலில் கேஷியராகப் பணியாற்றும் ராகவேந்திரா (64) என்பவரிடம் போன் செய்து உதவி கேட்டுள்ளார். அவரும் தன் வீட்டருகில் வசிக்கும் ஹரிகிருஷ்ணன் (21) என்ற இளைஞருடன் சம்பூர்ணத்தின் வீட்டுக்கு வந்துள்ளார்.

மருமகனின் மிரட்டல் குறித்து சம்பூர்ணம் கூற, ''இங்கு இருக்கவேண்டாம். புறப்பட்டு எனது வீட்டுக்கு வந்துவிடுங்கள் நாளை காலை நேராக போலீஸ் ஸ்டேஷன் போய்விடலாம்'' என ராகவேந்திரா கூறியுள்ளார்.

சம்பூர்ணம், அவரது மூத்த மகள் லட்சுமி, மகன் சாய்நாத்தை அழைத்துக்கொண்டு புதுநகர் மூன்றாவது தெருவில் இருந்து பிரதான சாலை வழியாக வந்துள்ளார்.

அங்கு எதிரில் மனோகரன் நின்றுள்ளார். அப்போது ராகவேந்திரா மற்றும் சீனிவாசன் ஆகியோர், ''ஏன் இங்கு வந்து தகராறு செய்கிறாய்?'' எனக்கூறி மனோகரனைப் பிடிக்க முயன்றனர். அவர்களிடம் சிக்காமல் மனோகரன் புது நகர் 4-வது தெரு வழியாகத் தப்பியோடியுள்ளார். பின்னால் துரத்திச் சென்ற ராகவேந்திரா மற்றும் சீனிவாசன் ஆகியோர் மடக்கிப் பிடிக்க முயன்றனர்.

அப்போது மனோகரன் தனது வலது பக்க இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை வேகமாக இழுத்து வெளியே எடுத்துள்ளார் . அப்பொழுது கத்தி அவரது வலது பக்க அடிவயிற்றில் ஆழமாக வெட்டுக்காயத்தை ஏற்படுத்திவிட்டது.

ஆனாலும் மனோகர் எதிரில் இருந்த பெரியவர் ராகவேந்திராவின் இடது பக்க மார்பில் கத்தியால் குத்தியுள்ளார். இதைப் பார்த்த சீனிவாசன் அருகில் இருந்த மூங்கில் கட்டையால் மனோகரைத் தாக்கி கையால் தள்ளி விட்டுள்ளார். இதில் கீழே விழுந்த மனோகர் மயங்கி விழுந்துவிட்டார்.

இதைப் பார்த்த அங்கிருந்த நபரொருவர் 100-க்கு தகவல் கொடுக்க அங்கு வந்த போலீஸார் 108 ஆம்புலன்ஸ் மூலம் மனோகர் மற்றும் ராகவேந்திரா இருவரையும் மீட்டு கேஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வயிற்றில் ஏற்பட்ட ஆழமான காயத்தால், மனோகரன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மனோகரன் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

காயம்பட்ட ராகவேந்திராவுக்கு அவசர சிகிச்சையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மோதலில் மனோகரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பூரணம் அவரது மகள் லட்சுமி மற்றும் சீனிவாசன் ஆகியோரை அயனாவரம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கத்தியை எடுத்தவர் அந்தக் கத்தியாலேயே உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x