Published : 09 Oct 2019 11:14 AM
Last Updated : 09 Oct 2019 11:14 AM

திமுக ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: நாங்குநேரியில் ஸ்டாலின் பிரச்சாரம்

திருநெல்வேலி

திமுக ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்துப் பேசிய ஸ்டாலின் உறுதியளித்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். 3 நாட்கள் நடைபெறும் இந்த பிரச்சாரத்தில் இரண்டாவது நாளாக இன்று பாளையங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட நொச்சிகுளம், கிருஷ்ணாபுரம், சிவந்திப்பட்டி ஆகிய ஊர்களில் தனது திண்ணை பிரச்சாரத்தை தொடங்கினார்.
எடப்பாடி அரசு எடுபிடி அரசாக செயல்படுகிறது என அவர் குற்றம் சாட்டினார்.

அப்போது அவர் கிராம மக்களிடம் அந்தந்த ஊர்களில் உள்ள பிரச்சனைகளைப் பற்றியும் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் பேசும்போது, "வருகிற 21-ம் தேதி நடைபெற உள்ள நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் நல்ல பாடத்தை மத்திய மாநில அரசுகளுக்கு புகுத்த வேண்டும்.

8 வருடமாக தங்களது ஆட்சியில் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தங்களது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள கோடி கோடியாக அமைச்சர்களுக்கும் எம்எல்ஏக்களுக்கு வழங்குவதற்காக கமிஷன் மற்றும் ஊழல் செய்து வருகின்றனர்.

மக்கள் பிரச்சினை பற்றி சிந்திப்பதில்லை. கடந்த ஐந்து முறை திமுக ஆட்சியில் இருந்தபோது பெண்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தியது. சொத்தில் சமபங்கு உரிமை, இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை என பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தது.

விவசாயிகளின் நலனுக்காக சுமார் 7000 கோடி ரூபாய் விவசாயக் கடனை ரத்து செய்தது. இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கியது,.

திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மானிய கடன் வழங்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை இந்த அரசு சிதைத்துவிட்டது. தற்போதைய ஆட்சியில் கடன் வழங்கப்படாததால் அதிக வட்டி வசூலிக்கும் தனியார் வங்கிகளுக்கு பெண்கள் செல்கின்றனர். இதனால் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளில் சிக்குகின்றனர்.

கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கக் கூடியவர்கள் விவசாயம், பெண்கள் மேம்பாடு, நாட்டு மக்கள் குறித்து கவலைப்படாமல் இருந்து வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. பொள்ளாசியில் நடந்த பாலியல் பயங்கரம் இன்னும் என்னை உலுக்கிக் கொண்டிருக்கிறது. நானும் பெண் பிள்ளையைப் பெற்றவன்தான்.

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை . தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக வேறு யாரும் சொல்லவில்லை ஓபிஎஸ்தான் கூறுகிறார். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், இதுவரை எதுவும் தெரியவில்லை.

திமுக ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களை நேரடியாக சந்தித்து வரும். கடந்த சட்டமன்ற தேர்தலில் நீங்கள் வாக்களித்தது போல நாடாளுமன்றத்தில் நீங்கள் வாக்களித்தது போல இந்த இடைத்தேர்தலிலும் நீங்கள் வாக்களிக்க வேண்டும் .மத்திய மாநில அரசுகளுக்கு நல்ல பாடத்தை புகட்ட வேண்டும். நின்றுவிடாமல் நன்றி கூறவும் வருவோம்." என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதன்பின் அவர் சிஎஸ்ஐ பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் அவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு கொண்டார்.

மாலையில் களக்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, களக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். நாளையும் அவர் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x