

மதுரை
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று (அக்.9) காலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு அமோகமான வெற்றி வாய்ப்பு உள்ளது.
அக்.21 அன்று நடைபெற உள்ள நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நிச்சயமாக திமுக வெற்றி பெரும். அதிமுகவினர் பணப்பட்டுவாடவில் ஈடுபட்டு வரும் நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மீது எடப்பாடி அரசு குற்றச்சாட்டு தெரிவித்து வருவது நியாயமானதல்ல" என்றார்.
அகழ்வாராய்சிகள் முடிவுகளை வெளியிட வேண்டும்..
தொடர்ந்து பேசிய அவர், "சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய அரசு சார்பில்அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற அகழ்வராய்சியை கைவிட்ட பிறகு தமிழக அரசு 4-ம் கட்ட அகழ்வாராய்ச்சியை சிறப்பாக செய்து அபூர்வமான பொருட்களைக் கண்டறிந்துள்ளது தமிழர்கள் பெருமையை பறைசாற்றும் விதமாக உள்ளது.
கீழடி அகழ்வராய்சி பொருட்களை கொண்டு மதுரையில் அருங்காட்சியகம் அமைத்து தமிழர் பெருமையை வெளிக்கொணர வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் முடிவுகள் வெளிவரவில்லை.
இதே போல் கீழடியில் மத்திய அரசு நடத்திய அகழ்வாராய்ச்சியின் முடிவுகளும் வெளிவரவில்லை. அவற்றை வெளியிட ஆவண செய்ய வேண்டும்" என்றார்.