தட்கல் முறையால் பறிபோகும் இலவச மின்சாரத் திட்டம்: திருப்பூர் விவசாயிகள் குற்றச்சாட்டு

தட்கல் முறையால் பறிபோகும் இலவச மின்சாரத் திட்டம்: திருப்பூர் விவசாயிகள் குற்றச்சாட்டு
Updated on
2 min read

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்

தட்கலில் விண்ணப்பித்து மின் இணைப்பு பெறலாம் என்ற மின்வாரியத்தின் தொடர்ச்சியான அறிவிப்பால், இலவச மின்சாரத் திட்டம் பறிபோவதாக திருப்பூர் விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

தமிழகத்தில் 1974-ம் ஆண்டு தொடங்கி 1986-ம் ஆண்டு வரை தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பது பிரதான கோரிக்கையாக இருந்தது. அப்போது ஒரு யூனிட் மின்சாரம் 14 பைசாவாக இருந்தது. மின்மீட்டர் அளவிடும் பெட்டிக்கான வாடகை 1 பைசாவை நீக்க வலியுறுத்தி கொங்கு மண்டலத்தில் போராட்டங்களும், தியாகங்களும் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் 2000-ம் ஆண்டு தொடங்கி 2019-ம் ஆண்டின் நடப்பு மாதமான அக்டோபர் வரை புதிதாக விண்ணப்பிக்க இருப்பவர்களும் தட்கலில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தமிழ்நாடு மின்வாரியம் தொடர்ந்து அறிவிப்பு செய்து வருகிறது.

இதுதொடர்பாக பல்லடம் பிஏபி பாசன சபை கிளைத் தலைவர் கோபால் கூறும்போது, ‘தட்கல் அறிவிப்பால் பல ஆண்டுகளாக நிலம் வைத்திருக்கும் பலரும், இலவச மின்சாரம் வேண்டி அரசுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் சூழல் உள்ளது. இலவச மின்சாரம் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தொடங்கி, கருணாநிதி ஆட்சிக் காலத்தில் விரிவு படுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பொங்கலூர், குண்டடம், தாராபுரம், உடுமலை, பல்லடம் மற்றும் அவிநாசி பகுதிகளில் தொழில்துறை அளவுக்கு விவசாயமும் உள்ளது, என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன் கூறும்போது, ‘ரூ. 2.5 லட்சத்துக்கும் மேல் பணம் செலுத்தி மின் இணைப்பு பெற்று, விவசாயம் செய்து கொள்ளலாம் என்கிறது புதிய தட்கல் திட்டம். இலவச மின்சாரத்தை ஒழிக்கவே முதலில் ரூ.10000, அடுத்து ரூ. 25000, அதன் பின்னர் ரூ. 50000 என அரசு மாற்றி யுள்ளது. இதனால் இலவச மின்சாரம் வேண்டி விண்ணப்பித்து மூப்பு அடிப்படை யில் பல ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகள் இணைப்பு கிடைக்காம லேயே ஏங்கி வருகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற் பட்டோரும், திருப்பூர் மாவட்டத்தில் 18000 பேரும் இலவச மின்சாரத்துக்கு விண்ணப் பித்து காத்துக் கிடக்கின்றனர்’ என்றார்.

அரசின் கொள்கை முடிவு:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கூறியிருப்பதாவது: மின்வாரிய உத்தரவின்படி 2000-ம் ஆண்டு ஏப். 1 முதல் 2010-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ளவர்கள், தட்கல் திட்டத்தின்கீழ் மின் இணைப்பு பெற விரும்பினால் விண்ணப்பம் பதிவு செய்ததற்கான அத்தாட்சி நகல், தட்கல் திட்ட கட்டணத்துக்கான வங்கி வரைவோலை, ஐந்து நட்சத்திர தரச்சான்று பெற்ற மோட்டார் வாங்கியதற்கான ரசீது, ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற்ற கெப்பா சிட்டர் வாங்கியதற்கான ரசீது மற்றும் அண்மையில் பெறப்பட்ட நில உடமை ஆவணங்கள் ஆகியவற்றுடன் விருப்பக் கடிதத்தை வரும் அக். 31-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மின்வாரிய செயற்பொறி யாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். கடந்த 2010-ம் ஆண்டு ஏப். 1-ம் தேதி முதல் வரும் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்க இருப்பவர்களும், வரும் 16-ம் தேதி முதல் 31-ம் தேதிக்குள் மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் மற்றும் வங்கி வரைவோலை ஆகியவற்றை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மின்வாரிய அலுவலர்கள் கூறும்போது, விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் என்பது அரசின் கொள்கை முடிவாகும். ஆகவே ஆண்டுக்கு எத்தனை இணைப்புகள் வழங்க வேண்டும் என்பதை அரசே முடிவு செய்யும். அரசின் அறிவுறுத்தல்படி இணைப்புகள் வழங்கி வருகிறோம், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in