

மு.யுவராஜ்
சென்னை
தமிழகம் முழுவதும் 2,500 படகுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர் கள், விசைப் படகு, நாட்டுப் படகு உள்ளிட்டவை மூலம் மீன்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவற்றில், மண்ணெண்ணெய் மூலம் இயங்கக் கூடிய இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகு களுக்கு ஒரு லிட்டர் ரூ.25 வீதம் ஆண்டுக்கு 3,400 லிட்டர் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.
மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்குவதற்கு ஆண்டு தோறும் மீன்வளத் துறையின் சார்பில் ஆய்வு நடத்தப்படும். அதில், ஆவணங்கள் உறுதி செய் யப்பட்ட பிறகு மானிய விலையில் மண்ணெண்ணெய் தொடர்ந்து வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், தமிழகம் முழுவ தும் கடந்த ஜூலை 25-ம் தேதி மீன்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வில் பங் கேற்காத காரணத்தால் கன்னியா குமரி மாவட்டத்தில் பதிவு செய்யப் பட்ட 6,350 படகுகளில் 1,850 படகுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை பழ வேற்காடு, நாகப்பட்டினம், கடலூர், ராமநாதபுரம், காஞ்சிபுரம் உட்பட தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட படகுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, மீண்டும் ஆய்வு நடத்தி, மானிய விலையில் மண்ணெண்ணெய் உடனடியாக வழங்க வேண்டும் என்று மீனவர் கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) பொதுச் செயலாளர் எஸ்.அந்தோணி கூறியதாவது:
மீன்வளத் துறை ஆய்வு நடத் திய காலகட்டத்தில் கன்னியாகுமரி மற்றும் கேரளா கடற்கரை பகுதி களில் கடும் மழை பெய்தது. இத னால், தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளில் மீனவர்கள் பல நாட் களாக கடலுக்குச் செல்ல முடிய வில்லை.
மேலும், கன்னியாகுமரியில் இருந்து கேரளா மற்றும் ஆழ்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களால் திரும்பிவர முடியவில்லை. இதனால், கன்னி யாகுமரி மாவட்டத்தில் 1800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆய்வில் பங்கேற்க முடியவில்லை.
இதேபோல் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஆய்வில் பங்கேற்கவில்லை. வெளிச்சந்தையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ.60 வரை விற்கப்படுகிறது. இதனால், மீனவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் 2, 3 தினங்கள் ஆய்வு நடத்தப்படும். இந்த ஆண்டு ஒரு நாள் மட்டும் ஆய்வு நடத்தியதுதான் இந்தச் சிக்கலுக்கு காரணம். எனவே, மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மீண்டும் ஆய்வு நடத்தி மானிய விலை மண் ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை ஏற்கெனவே மண்ணெண்ணெய் வழங்கி வந்தவர்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “ஒரு மாதத்துக்கு முன்பே தேதி அறிவிக்கப்பட்டு மீனவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆய்வுக்கு வராதவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண் ணெய் வழங்குவது நிறுத்தப்பட்டுள் ளது. மழை பெய்த காரணத்தால் தொலைதூரம் சென்றவர்களால் திரும்பி வர முடியவில்லை என்று மீனவர்கள் முறையிட்டுள்ளனர்.
எனவே, விரைவில் தேதி முடிவு செய்யப்பட்டு மீண்டும் ஆய்வு நடத்தப்படும். ஆய்வில், பதிவு செய்யப்பட்ட படகு மற்றும் தகுதியான ஆவணங்கள் வைத் திருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க நட வடிக்கை எடுக்கப்படும்" என்றார்.