Published : 09 Oct 2019 06:58 AM
Last Updated : 09 Oct 2019 06:58 AM

கீழடி அகழாய்வுக்கு 22 ஏக்கர் நிலம் கொடுத்த சகோதரிகள்: பழந்தமிழர்கள் வாழ்ந்ததால் பெருமிதம்

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் அகழாய்வு செய்வதற்காக 22 ஏக்கர் நிலத்தை சகோதரிகள் இருவர் தொல்லியல் துறையினரிடம் வழங்கியுள்ளனர்.

கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ம் தேதி தொடங்கியது. மொத்தமுள்ள 110 ஏக்கரில் முதற்கட்டமாக 10 ஏக்கரில் மட்
டும் அகழாய்வு செய்யப்படுகிறது. முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதியம்மாள் ஆகியோரது நிலங்களில் 52 குழிகள் தோண்டப்பட்டன.

5-ம் கட்ட அகழாய்வுப் பணி செப்.30-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 5-ம் கட்ட அகழாய்வில் இதுவரை மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், சுடுமண் சிற்பங்கள், இரும்புப் பொருட்கள், செப்பு, வெள்ளிக் காசுகள், உணவு குவளை, தண்ணீர் ஜக், சூதுபவளம், எழுத்தாணி உட்பட 750-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. அதேபோல் இரட்டை வட்டச் சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறைகிணறுகளும் கண்டறியப்பட்டுள்ளன.
தற்போது தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் பணியில் தொல்லியல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 2 வாரங்களுக்கு முன்பு 4-ம் கட்ட அகழாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதற்கிடையே, அகழாய்வு பணிகளை மேற்கொள்வதற்காக, தங்களுக்குச் சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை நீதியம்மாள், மாரியம்மாள் ஆகிய சகோதரிகள் தொல்லியல் துறையிடம் வழங்கி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியது: அகழாய்வுக்குத் தேர்
வான 110 ஏக்கரில் எங்களுடைய 22 ஏக்கரும் வருகிறது. அவற்றில் முழுமையாக அகழாய்வை செய்ய அனுமதி கொடுத்துள்ளோம். எங்களது நிலத்தில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள் வாழ்ந்திருப்பது பெருமையாக உள்ளது. இந்த அகழாய்வால் எங்களுக்கும் பெருமை கிடைத்துள்ளது என்றனர்.

இரண்டரை ஏக்கர் நிலம் கொடுத்த கருப்பையா என்பவரது மனைவி சேதுராமு கூறும்போது, ‘‘அகழாய்வுக்காக நிலம் கொடுத்ததில் பெருமைப்படுகிறேன். இந்த அகழாய்வால்தான் எங்கள் பகுதி வெளி உலகுக்கு தெரிந்தது'’ என்றார்.

அகழாய்வுப் பணி முடிந்ததும் இந்த நிலத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் தொல்லியல் துறை ஒப்படைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x