Published : 08 Oct 2019 08:14 PM
Last Updated : 08 Oct 2019 08:14 PM

சீன அதிபர் வருகை வரலாறு காணாத பாதுகாப்பு: சென்னை, காஞ்சிபுரத்தில் பாதுகாப்பு பணியில் 15000 போலீஸார்

தமிழகத்தில் 11-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு, நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகிற 11-ந்தேதி முதன் முறையாக சென்னை வருகிறார். 2 நாட்கள் அரசு முறை பயணமாக வரும் அவர் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தப்பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கிடையேயான ராஜிய உறவு, பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும். பேச்சுவார்த்தையில் இரு நாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.

பிரதமர் மோடி ஒருநாள் முன்னதாகவே சென்னை வந்துவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன அதிபரின் 11-ம் தேதி சென்னை வருகிறார். அவர் , வருகையையொட்டி சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் மவுண்ட் துணை ஆணையர் பிரபாகர் தலைமையில் 3 உதவி ஆணையர்கள் மற்றும் 7 இன்ஸ்பெக்டர்கள், 21 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 120 போலீஸார் பாதுகாப்பு பணியில் இருப்பர். இது தவிர மத்திய அரசின் பாதுகாப்பும் இருக்கும்.

இது தவிர வெளியில் வரும் வழியில் மூன்று துணை ஆணையர்கள் தலைமையில் மூன்று கட்டங்களாக பாதுகாப்பு. 6 உதவி ஆணையர்கள் 16 ஆய்வாளர்கள், 48 உதவி ஆய்வாளர்கள் 300 போலீஸார் பாதுகாப்பு பணியில் இருப்பர். அவர் தங்கும் நட்சத்திர ஹோட்டலுக்கும் 7 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கு சேலம் டிஐஜி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு கீழ் 3 துணை ஆணையர்கள் 4 உதவி ஆணையர்கள் , 12 ஆய்வாளர்கள் 36 உதவி ஆய்வாளர்கள், மற்றும் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஐடிசி சோழா ஓட்டலிலிருந்து முட்டுக்காடு வரை சென்னை போலீஸாருக்கு சாலை வழியாக பந்தோபஸ்து டூட்டி போடப்பட்டுள்ளது. இந்த மார்கத்தை 8 பிரிவுகளாக பிரித்து 8 துணை ஆணையர்கள், 2 கூடுதல் துணை ஆணையர்கள், 30 உதவி ஆணையர்கள், 90 ஆய்வாளர்கள், 270 உதவி ஆய்வாளர்கள் என ஆயிரக்கணக்கான போலீஸார் வழியெங்கும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் சீன அதிபர் தங்கும் நட்சத்திர ஹோட்டலில் துவங்கி முட்டுக்காடு வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நான்கு டிஐஜிக்கள் தலைமையில் 16 துணை ஆணையர்கள் கீழ் பாதுகாப்பு பணி, சோதனைப்பணி, பந்தோபஸ்து பணி என மொத்தம் சென்னை போலீஸர் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

சீன அதிபர் விமான நிலையத்திலிருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் செல்லும் சாலைகள், மற்றும் நட்சத்திர ஓட்டலில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலைகள் 8 மையங்களாக பிரித்து துணை ஆணையர்கள் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கூடுதல் ஆணையர் தெற்கு பிரேமானந்த் சின்ஹா ஒருங்கிணைப்பார்.

காவல்துறையினர் திட்டமிட்டபடி சீன அதிபர் செல்லும் பயண பாதையில் பிரச்சினை ஏற்பட்டால் மாற்று பாதையில் அழைத்துச் செல்வதற்கு போலீஸார் திட்டமிட்டு அந்த சாலைகளிலும் துணை ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் கிண்டி நட்சத்திர ஓட்டலில் இருந்து மாமல்லபுரம் வரை உள்ள பகுதிகளில் உயர் கட்டிடங்களிலும் காவலர்கள் அமர்த்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அடிப்படையில் மூன்று ஷிப்ட்களாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

ஹோட்டலைச் சுற்றியும், செல்லும் வழியெங்கும் ஜாமர் கருவிகள், வெடிகுண்டு செயலிழப்பு கருவிகள், ரிமோட் செயலிழப்பு உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழியெங்கும் கண்காணிப்பு கேமராக்கள் தற்காலிக டவர்கள் அமைக்கப்பட்டு சாலைகள் சோதனை செய்யப்படும்.

அதிபர் வரும் நேரம், போகும் நேரங்களில் விமானம், ஆளில்லா விமானம் உள்ளிட்ட அனைத்தும் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை தவிர முட்டுக்காட்டிலிருந்து மாமல்லபுரம் வரையிலான பகுதி, மாமல்லபுரம் தங்குமிடம் என காஞ்சிபுரம் மாவட்ட போலீஸார் 5000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x