தமிழக காய்கறிகள் மீது குற்றம் சுமத்தும் கேரளம்: விவசாயிகள் சங்கம் கண்டனம்

தமிழக காய்கறிகள் மீது குற்றம் சுமத்தும் கேரளம்: விவசாயிகள் சங்கம் கண்டனம்
Updated on
1 min read

கேரளத்தில் உள்ள சாலியாறு மாசடைந்துள்ளது குறித்த பிரச்சினையை திசை திருப்ப, தமிழக காய்கறிகளில் நச்சுத்தன்மை உள்ளதாக கேரள அரசு கூறி வருகிறது என விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழகத்தில் காய்கறி உற்பத்திக்கு தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள், உரங்கள் பயன்படுத்தப்படுவதாக கேரள அரசு குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில், கேரள அரசின் இந்நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசு அறிக்கை விட வேண்டுமென விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) வலியுறுத்தியுள்ளது.

கோவையில் நேற்று இச்சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். சங்க பொதுச்செயலாளர் பி.கந்தசாமி பேசும்போது, ‘தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளில் நச்சுத்தன்மை உள்ளதாக கேரளம் கூறி வருகிறது.

ஆனால், தமிழக காய்கறிகளை ஆய்வு செய்த வேளாண்மை பல்கலைக்கழகம், அந்தக் காய்கறிகளில் எந்த பாதிப்பும் இல்லையென தெரிவித்துவிட்டது. இருந்தாலும், எல்லையோரப் பகுதிகளில் கேரள அரசு சோதனைச்சாவடிகள் அமைத்து தமிழக காய்கறிகளை சோதனை செய்வதாக கூறப்படுகிறது. எனவே கேரள அரசின் இந்த நடவடிக்கையை கண்டிக்கும் வகையில், தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும்.

கேரளத்தில் உள்ள சாலியாற்றில் மாசுபாடு அதிகரித்து, அந்த நீரை பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படக்கூடும் என சமீபத்தில் ஆய்வறிக்கை வந்துள்ளது. இந்த உண்மையை மறைக்க, தமிழக காய்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதாகக் கூறி அங்குள்ள மக்கள் திசை திருப்பப்பட்டுள்ளனர். அரசியல் நோக்கத்துடன் தமிழக விவசாயிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு, கேரள மக்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

நாளை பேரணி

இதுபோன்ற விவசாயிகள் நலன் காக்கும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை, துடியலூரில் நாளை (ஜூலை 5) உழவர் தின பேரணி மற்றும் நினைவஞ்சலி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in