

சென்னை
ரஜினி முதல்வர் வேட்பாளர் என்றால் அவர் பின்னால் நான் நிற்கத் தயார் என அதிமுகவின் முக்கியப் பிரமுகரான ராதாரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் பிரமுகரும், ரஜினியின் தீவிர ஆதரவாளருமான கராத்தே தியாகராஜனின் பிறந்த நாள் விழாவில் அதிமுக பிரமுகர் நடிகர் ராதாரவி பேசினார். அப்போது அவர் ரஜினி குறித்தும், ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர் பின்னால் நிற்கத் தயார் என்றும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
விழாவில் ராதாரவி பேசியதாவது:
“கராத்தே தியாகராஜன் என்றால் நட்பு என்று அர்த்தம். எந்த ஒரு விஷயம் என்றாலும் ஓடிவந்து உதவுவார். எனது தாயார் மரணம், சரத்குமார் அண்ணன் மரணம் உள்ளிட்ட பல விஷயங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அவர் எங்கே இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படமாட்டார். யார் அழைத்தாலும் ஓடிவந்து உதவுவார்.
மேடையில் எஸ்.வி.சேகர் உள்ளார். நாங்கள் எல்லோரும் நட்பாக இருப்பவர்கள். நட்பாக இருப்பவர்கள் என்றால் எதிர்காலத்தில் கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்க வேண்டும். இருப்போம் என்று நினைக்கிறேன்.
ரஜினி வருங்காலத்தில் முதல்வர் வேட்பாளர் என்றால் நான் அவர் பின்னால் நிற்கத் தயார். 'என்னங்க நீங்க அவர் பின்னாடி நிற்கிறேன் என்கிறீர்கள்’ என்று என்னைக் கேட்டார்கள். 'ஆமாய்யா? ரஜினி பாஜக. அப்புறம் அதிமுக கூட்டணிதானே. அப்படி என்றால் சரிதானே' என்றேன். அவர் முதல்வராக நிற்கிறார் என்றால் தொடை நடுங்குகிறவர்கள் இடம் வேறு.
சகோதரர் ராஜசேகரிடம் பேசும்போது சொன்னேன். ரஜினி அரசியலுக்கு வருவார் என்று சொன்னேன். அவர் எப்படி வெல்வீர்கள் என்று கேட்டார். ஜெயிப்போம் அவ்வளவுதான். ஏனென்றால் பவர் இருக்கவேண்டும். மனிதாபிமானம் இருக்கவேண்டும். எதிர்க்கிற சக்தி வேண்டும். இது எல்லாம் இருந்தால் வெற்றி நிச்சயம்.
இவை எல்லாம் இணைந்துள்ளது. ஏனென்றால் வலுவான சக்தி ஒன்று சேரும்போது வலுவற்ற சக்தி தோற்கும். உடனே எல்லோரும் சொல்வார்கள். இவர் அவரைப் பற்றித்தான் பேசுகிறார் என்று. இணையதளத்தில் போட்டுவிடுவார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். நான் அவரைப் பற்றித்தான் பேசினேன். நானெல்லாம் மன்னிப்பு கேட்கிற ரகம் கிடையாது.
ரஜினி அரசியலுக்கு வருவார் என்று கராத்தே தியாகராஜன் சொல்லிக்கொண்டே இருக்கிறார். நானும் அதை நம்பிச் சொல்கிறேன். அவர் வந்தால் நானும் உடன் வருவேன் என்று. ரஜினி சடக்கென்று பேசி ஒரு முடிவை எடுக்கமாட்டார். யோசிச்சுத்தான் எடுப்பார். ஆனால் இந்த முறை முடிவெடுப்பார்.
சைதாப்பேட்டை இடைத்தேர்தலில் கராத்தே தியாகராஜன் இந்த டிவிஷனுக்கு வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டு வாங்கினார். அவ்வளவு நம்பிக்கை உள்ளவர் கராத்தே தியாகராஜன்”.
இவ்வாறு ராதாரவி பேசினார்.
ராதரவி திமுகவில் இருந்தார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதிமுகவுக்குப் போனார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திமுகவினரை கடுமையாக விமர்சித்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதிமுகவினரை, ரஜினி, கமலை மேடையில் கடுமையாக விமர்சித்தார்.
நயன்தாரா குறித்து ஒரு சினிமா விழாவில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்த, அதனால் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர் தன்னிடம் விளக்கம் கேட்கவில்லை என மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதன்பின்னர் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் காங்கிரஸிலிருந்து சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட, ரஜினியின் தீவிர ஆதரவாளர் கராத்தே தியாகராஜனின் பிறந்த நாள் கூட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் அவர் ரஜினி முதல்வர் வேட்பாளராக வந்தால் அவர் பின்னால் நான் நிற்பேன் என்று பேசினார். பின்னர் சமாளித்து ரஜினி பாஜக , நாங்கள் கூட்டணிக் கட்சி. அதனால் பின்னால் நிற்பேன் என்று சொல்கிறேன் என்று பேசினார். இதில் இரண்டு விஷயங்களை ராதாரவி கவனிக்காமல் பேசியதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிமுக மிகப்பெரிய இயக்கம். எடப்பாடி பழனிசாமி முதல்வராக உள்ளார். ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். முதல் இடத்தில் உள்ள அதிமுக, ரஜினி முதல்வர் வேட்பாளர் என்றால் ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வருமா? தங்கள் கட்சியில் தலைவர்கள் இருக்கும்போது புதிதாக கட்சி ஆரம்பிக்கும் ஒருவர் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தால் அதிமுக கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளுமா? ராதாரவியின் பேச்சை அதிமுக தலைவர்கள் ரசிப்பார்களா? என்பதை உணராமல் பேசியதால் அது சர்ச்சையை உருவாக்கும்.
அடுத்து ரஜினி பாஜக, நாங்கள் பாஜகவின் கூட்டணி கட்சி என்று ராதாரவி பேசியது. இதை ரஜினியே ரசிக்க மாட்டார். காரணம் ரஜினி தனிக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கும்போது அவரை பாஜக என மேடையில் சொல்வதன்மூலம் ரஜினி பாஜகவின் பக்கம் இருப்பவர் என்கிற தோற்றத்தை ஏற்படுத்துவதன்மூலம் ரஜினிக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார் ராதாரவி என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.