Last Updated : 08 Oct, 2019 02:49 PM

 

Published : 08 Oct 2019 02:49 PM
Last Updated : 08 Oct 2019 02:49 PM

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: குடுகுடுப்பைக்காரர் வேடமிட்டு திமுக தலைமைக் கழக பேச்சாளர் பிரச்சாரம்

விழுப்புரம்

விக்கிரவாண்டி தொகுதியில் குடுகுடுப்பைக்காரர் வேடமிட்டு நூதன முறையில் திமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளர் வாக்கு சேகரித்தார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக, திமுக என அந்தந்த கட்சி நிர்வாகிகள், அதிமுக அமைச்சர்கள், திமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கானை பகுதியில் தனி நபராக ஒருவர் குடுகுடுப்பைக்காரர் வேடமிட்டு வீதி வீதியாகச் சென்று வீட்டு வாசலில் குடுகுடுப்பை அடித்து திமுகவுக்கு வாக்கு சேகரித்து வந்தார். அவரை நெருங்கிப் பார்த்தபோது அவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பதும், திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் என்பதும் தெரியவந்தது.

திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் சேலம் கோவிந்தன், ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும், சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் இவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவிந்தனின் இந்த நூதன முறை பிரச்சாரம் மக்களை ரசிக்க வைப்பது மட்டுமின்றி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. குடுகுடுப்பை சத்தம் கேட்டவுடன் தன்னையும் அறியாமல் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். இதே போல் கடை வீதிகள், பேருந்து நிறுத்தம் , மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனி நபராக நின்று எந்த விமர்சனத்தையும் காதில் வாங்காமல், கேலி கிண்டல்களைக் கண்டு கொள்ளாமல் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் கோவிந்தன்.

பிரச்சாரத்தின்போது திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை விளக்கியும், தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்தும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். கோவிந்தனின் நூதன முறை பிரச்சாரம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x