Published : 08 Oct 2019 12:55 PM
Last Updated : 08 Oct 2019 12:55 PM

சீன அதிபர் -பிரதமர் மோடி சந்திப்பு: மாமல்லபுரம் ஓஎம்ஆர் சாலையில் செய்யப்படும் மாற்றங்கள் என்ன?

சென்னை

சீன அதிபர்-பிரதமர் மோடியின் மாமல்லபுரம் சந்திப்பை ஒட்டி வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் சென்னை மற்றும் மாமல்லபுரம் செல்லும் பகுதிகளில் செய்யப்படும் போக்குவரத்து மாற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து பொதுமக்களுக்கு போலீஸ் தரப்பில் முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் மோடி இருவரும் நடத்தும் பேச்சுவார்த்தை வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் மாமல்லபுரத்தில் நடக்கிறது. அதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றம் குறித்து டிஐஜி மற்றும் அடையாறு துணை ஆணையர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து மாற்றம் மற்றும் போக்குவரத்துத் தடைகள் குறித்து டிஐஜி தலைமையில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது.

அதன் விவரம்.

* இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பை ஒட்டி சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு முக்கியப் பாதுகாப்பு மண்டலமாக மாமல்லபுரம் மாற்றப்பட்டுள்ளது.

* பிரதமர் மோடி அக்.10-ம் தேதிக்கு முன் கூட்டியே கோவளம் வருவதாகக் கூறப்படுகிறது. அக்.11 மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் சீன அதிபர் ஐடிசி சோழாவுக்கு வருகை தருகின்றார். மதியம் 4 மணி அளவில் ஐடி சோழாவிலிருந்து மாமல்லபுரம் நோக்கிப் பயணிக்கிறார். பேச்சுவார்த்தை நிகழ்வுகள் முடிந்தபின் இரவு 8 மணி அளவில் மாமல்லபுரத்திலிருந்து ஐடிசி சோழா ஓட்டலுக்குத் திரும்புகின்றார்.

* 12.10.2019- நிகழ்ச்சி நிரல்:

காலை 8 மணிக்கு ஐடிசி சோழாவிலிருந்து புறப்பட்டு மாமல்லபுரம் செல்கின்றார். மதியம் 12 மணியளவில் மாமல்லபுரத்திலிருந்து ஐடிசி சோழாவுக்குத் திரும்புகின்றார். மதியம் 2 மணிக்கு விமான நிலையம் செல்கின்றார்.

* மேற்கண்ட 2 நாட்களும் இப்பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

* அக்.1 முதல் மாமல்லபுரம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெளியூரிலிருந்து புதிதாக வருபவர்கள், வெளியூருக்குச் செல்பவர்கள், புதிதாக வந்து தங்குபவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

* புதிதாக யாராவது வந்தால் அவர்கள் குறித்த தகவலை போலீஸாருக்குத் தெரிவிக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

* ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட மாமல்லபுரம் விவிஐபிக்கள் பயணிக்கும் பகுதிகளில் 11-ம் தேதி காலை 11 மணிமுதல் 12-ம் தேதி மதியம் 3 மணி வரை அனைத்து சரக்கு மற்றும் தண்ணீர் லாரிகள் உட்பட பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தடை செய்யப்படுகின்றன.

* இப்பகுதி வழியாக 11-ம் தேதி இரவு 11 மணியிலிருந்து 12-ம் தேதி அதிகாலை 5 மணிவரை அவசர வேலையாக செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவையும் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படும்.

* விவிஐபிக்கள் செல்லும் இரண்டு நாளும் அவர்கள் செல்லும் நேரத்தில் கிண்டி முதல் ஓ.எம்.ஆர்.சாலை வரை போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும்.

* இப்பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு போலீஸாரின் விழிப்புணர்வு எச்சரிக்கையாக மேற்கண்ட நாட்களுக்கு முன்னரும் பின்னரும் சந்தேகப்படும்படியான புதிய அல்லது அறிமுகமில்லாத நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் அளிக்கும்படி கோரப்படுகிறார்கள்.

* மேற்கண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தவிர சென்னையில் தனியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்காக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை, கல்விக்கூடங்கள், நிறுவனங்கள் எதையும் மூட உத்தரவிடவில்லை , பொதுமக்களுக்கு இடையூறின்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவ்ல்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x