

மதுரை
நீட் தேர்வு கல்வியில் ஏழை, பணக்காரர்கள் பாகுபாட்டை ஏற்படுத்துகிறது. இத்தகைய ஏற்றத்தாழ்வு இருந்தால் எப்படி கல்வியில் நீடித்த வளர்ச்சி என்ற ஐ.நா.வின் இலக்கை எட்ட இயலும் என கேள்வி எழுப்பியுள்ளார் மதுரை மாணவி.
மதுரை மாவட்டம் இளமனூர் அருகே உள்ள கார்சேரியைச் சேர்ந்தவர் மாணவி பிரேமலதா. பள்ளிக்கூடங்களில் மனித உரிமைகள் பாடம் கற்பிப்பதின் அவசியம் குறித்து ஐநா சபையில் பேசியுள்ளார்.
பிரேமலதா 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது 'ஏ பாத் டூ டிக்னிட்டி' (A Path to Dignity: The Power of Human Rights Education) என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. அதில் பிரேமலதா தன் கருத்துகளைக் கூறியிருந்தார். 7 ஆண்டுகள் கழித்து பிரேமலதாவுக்கு இந்த ஆவணப்படத்தின் அடிப்படையில் ஐநா சபையில் பேச வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, ஜெனீவாவில் அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் மாணவி பிரேமலதா பங்கேற்றுப் பேசினார்.
அங்கே பேசிய அவர், "இந்தியாவில் நிலவும் சாதிய முறையால் பாதிக்கப்பட்ட பெண் நான். நான் என்ன சாதியில் பிறக்க வேண்டும் என்று நான் தீர்மானிக்கவில்லை. ஆனால், என் பிறப்பு தொட்டே என் மீது சாதிய அடக்குமுறைகள் ஆரம்பித்துவிட்டன. அதுவும் குறிப்பாக கல்வி முறையில் சாதியத்தின் தாக்கத்தை நான் வெகுவாகவே உணர்ந்தேன். உயர் சாதி, தாழ்ந்த சாதி என்ற வெறுப்புணர்வு குழந்தைகள் மத்தியில் விதைக்கப்படுவதை நான் மனித உரிமைப் பாடங்களைப் படித்தபோதுதான் தெரிந்து கொண்டேன்.
இந்திய கல்வி முறை நீடித்த வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறது. நீட் தேர்வு முறை கல்வியில் பணக்காரர் - ஏழை வித்தியாசத்தை அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வால் முதன்முறையாக அனிதா என்ற பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொண்டார். நீட் போன்ற ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் கல்வியில் நீடித்த வளர்ச்சி எப்படி சாத்தியமாகும்" என முழங்கினார்.