

மக்களவைத் தேர்தல் தோல்வியால் தொண்டர்கள் சோர்வடையாமல் இருக்க, இரண்டொரு நாளில் கட்சியின் செயற்குழுவை கூட்ட முடிவு செய்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். 2016 சட்டசபை தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் சேர்ந்து, 14 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 3 தொகுதிகளில் மட்டுமே டெபாசிட்டை பெற முடிந்தது. விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும் ஊர் ஊராகப் போய் ‘மோடிக்கு வாக்களியுங்கள்’ என்று தீவிர பிரச்சாரம் செய்தும் எடுபடவில்லை. நாடு முழுவதும் வீசிய மோடி அலை, தமிழகத்தில் அதிமுகவிடம் அடங்கிப் போய்விட்டது.
பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், நான்கைந்து இடங்களையாவது பிடித்து விடுவோம் என்று சொல்லிக் கொண்டிருந்த தேமுதிகவினர், இந்த படுதோல்வியால் மிகவும் சோர்ந்து போயுள்ளனர். கட்சி பெரிய தோல்வியை சந்தித்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக் கைகளைப் பற்றி கவலைப்படாமல், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொள்ளாச்சியில் தங்கி தனது மகனின் படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வருவது தொண்டர் களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோது தேமுதிகவுக்கு 30 லட்சத்து 72 ஆயிரத்து 881 ஓட்டுகள் கிடைத்தன. அதாவது, 10.1 சதவீத வாக்குகளை அது பெற்றிருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் மொத்தம் 20.19 லட்சம் வாக்குகளே கிடைத்துள்ளன. வாக்கு வங்கியும் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது.
இதுதொடர்பாக தேமுதிகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘நாங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் எங்களின் கூட்டணிக்கு சிறப்பான அடித்தளம் கிடைத்துள்ளது. மோடியின் பெயரை தமிழகம் முழுவதையும் கொண்டு சேர்த்த பெருமை விஜயகாந்தை சேரும். இந்தக் கூட்டணி தொடரும் என எண்ணுகிறோம். தமிழகத்தில் அடுத்து நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணி வலுப்பெற்ற கூட்டணியாக மாறும். ஆனாலும், இதுபற்றிய இறுதி முடிவை தலைவர்தான் அறிவிப்பார்’’ என்றார்.
மற்றொரு நிர்வாகி கூறும்போது, ‘‘ எங்கள் கட்சியின் செயற்குழு இரண்டொரு நாளில் கூடுகிறது. தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராயப்படும். மேலும், கூட்டணி நிலவரம் குறித்தும் விவாதிக்கப்படும்’’ என்றார்.
தோல்வியால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த கட்சியின் செயற்குழுவை விஜயகாந்த் கூட்டுகிறார். அதில் தோல்விக்கான காரணங்கள் மட்டுமின்றி, கட்சியை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. 2016 சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.