Published : 07 Oct 2019 04:24 PM
Last Updated : 07 Oct 2019 04:24 PM

மேகேதாட்டு அணை கட்ட தமிழக அரசின் கருத்து தேவையில்லையா?- வாசன் கண்டனம்

சென்னை

மேகேதாட்டு அணை கட்ட தமிழக அரசின் கருத்து தேவையில்லை என்று கர்நாடக அரசு கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்ட மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் தமிழ்நாட்டின் கருத்து தேவையில்லை என்று தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. கர்நாடக பாஜக அரசு, காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் நியாயமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது 1994-ம் ஆண்டில் மைசூரு மாகாணத்துக்கும், மெட்ராஸ் மாகாணத்துக்கும் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி காவிரியில் அணை கட்டுவதற்கு இரு மாகாணமும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

மேலும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, காவிரி ஒழுங்காற்றுக் குழு, காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் கோட்பாடுகளை, வழிகாட்டுதலை கர்நாடக அரசு மீறி மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழக அரசிடம் கருத்து கேட்கத் தேவையில்லை என்று தன்னிச்சையாக முடிவெடுப்பது நியாயமில்லை. குறிப்பாக மேகேதாட்டுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு உரிய காவிரி நதிநீர் கிடைக்காமல் தடைபடும்.

இதனால் காவிரி நதிநீரை நம்பியுள்ள தமிழக விவசாயிகள் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் விவசாயத் தொழிலுக்கு தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்படுவர். அது மட்டுமல்ல காவிரியில் அணை கட்டுவதன் மூலம் காவிரி வனப்பகுதிகள், அணை அமையும் பகுதியில் உள்ள கிராமங்கள், விளைநிலங்கள் போன்றவையும் பாதிப்புக்கு உள்ளாகும். இப்படி பல்வேறு பாதிப்புகளுக்கு இடையே காவிரியில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயல்பாடுகள் இரு மாநில மக்களின் நலனைப் பாதிக்கின்ற வகையில் அமைந்துள்ளது.

தமிழக - கர்நாடக மக்களின் நல்லுறவுக்கு வலு சேர்க்க வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமே தவிர, இரு மாநிலங்களுக்கு இடையே அச்சத்தை, பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சிகளில் கர்நாடக அரசு ஈடுபடக்கூடாது என்பது இரு மாநில மக்களின் எண்ணமாகும். காவிரியால் கர்நாடகமும், தமிழகமும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஏற்கெனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதை சரியாக, முறையாக கடைப்பிடிக்க வேண்டியது இரு மாநில அரசுகளின் கடமையாக இருக்கின்ற வேளையில் தமிழக அரசிடம் கருத்து கேட்கத் தேவையில்லை என்று கர்நாடக அரசு தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல.

எனவே கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு முயற்சி எடுக்கும் விதமாக மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பிய கடிதத்தை அந்த அமைச்சகம் நிராகரித்து, இனிமேலும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடக்கூடாது என்பதைத் தெரிவிக்க வேண்டும். தமிழக அரசும் மத்திய அரசிடம் கர்நாடக அரசின் இம்முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, தமிழக அரசிடம் கருத்து கேட்காமல் காவிரியில் அணை கட்ட அனுமதி தரக்கூடாது என்பதையும் வலியுறுத்த வேண்டும்

மத்திய அரசும், காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் காவிரி நதிநீரைப் பங்கிடுவதிலும், அணை கட்டும் பிரச்சனையிலும் நியாயத்தின் அடிப்படையில் முறையான சரியான நடவடிக்கைகளை எடுத்து மக்கள் நலன் காக்க வேண்டும்'' என வாசன் தெரிவித்துள்ளார் .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x