

காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக் குடியில் ஓய்வுபெற்ற அஞ்சலக அதிகாரி வீட்டில் 175 பவுன் கொள்ளை போனது.
காரைக்குடி அருகே தேவ கோட்டை ரஸ்தா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ். ஓய்வுபெற்ற அஞ்சலக அதிகாரி. இவரது 3 மகன்களுக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். காரைக்குடியில் ஜெயராஜூம், அவரது மனைவி காணிக்கைமேரி மட்டும் வசித்து வருகின்றனர்.
இருவரும் செப்.26-ம் தேதி ராமேசுவரத்தில் இருக்கும் மூத்த மகன் வீட்டுக்கு சென்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலையடுத்து ஜெயராஜ் வந்து பார்த்தபோது, வீட்டின் வெவ்வேறு அறைகளில் 3 பீரோக்களில் இருந்த 175 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
காரைக்குடி டிஎஸ்பி அருண் மற்றும் சோமநாதபுரம் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். இதுகுறித்து ஜெயராஜ் கூறும்போது, மனைவி நகை 65 பவுன், மூத்த மருமகள் நகை 25 பவுன், 2-வது மருமகள் நகை 85 பவுன் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன என்றார்.