36 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் 17 முதல் தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை தொடக்கம்

36 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் 17 முதல் தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை தொடக்கம்
Updated on
1 min read

எஸ். முஹம்மது ராஃபி

ராமேசுவரம்

ஏறக்குறைய 36 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு அக்.17 முதல் விமான சேவை தொடங்குகிறது.

இரண்டாம் உலகப் போரின்போது 1940-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் விமானப் படைத் தேவைக்காக இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் பலாலியில் விமானதளம் அமைக்கப்பட்டது. இலங்கை விடுதலை அடைந்த பின்னர் சென்னை மற்றும் தென்னிந்திய நகரங்களில் இருந்து பலாலிக்கு விமானங்கள் இயக்கப்பட்டன.

இலங்கையில் 1983-ம் ஆண்டு உள்நாட்டுப் போர் நடந்ததால் இந்தியாவில் இருந்து பலாலிக்கு விமானச் சேவை நிறுத்தப்பட்டது. 1990-ம் ஆண்டு இலங்கை ராணுவம் பலாலி விமான தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வளையமாக அறிவித்தது. அதையடுத்து அங்கு வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் 2009-ல் முடிவுக்கு வந்த பிறகு பலாலி விமானதளம் இந்தியாவின் நிதி உதவியுடன் புனரமைக்க அந் நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங் கியது. ஆனால், பலாலியில் ராணுவத் தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 6,000 ஏக்கர் நிலத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்களை மீண்டும் மீள் குடியேற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன் வைக்கப்பட்டு அதற்காகப் பல போராட்டங்கள் நடந்தன. இதனால், விமான தளத்தைப் புனரமைக்கும் பணி தாமதம் அடைந்தது.

இலங்கையின் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வட மாகாணத்தின் வளர்ச்சிப் பணிக்கும், யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன் துறை துறைமுகத்தை மேம்படுத்து வதற்கும், பலாலி விமான தளத்தை விமான நிலையமாக மாற்றுவதற்கும் சுமார் ரூ.300 கோடி இந்தியா நிதி உதவி அளித்தது.

இந்நிலையில், பலாலி விமான நிலையத்தின் புனரமைப்புப் பணிகளை இலங்கை போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கடந்த ஜூலை 6-ம் தேதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக ஓடுபாதை 3,500 மீட்டர் நீளம் விரிவாக்கம் செய்யப்பட்டு தொடர்பு வசதிகளும், நிரந்தரமான முனையக் கட்டிடப் பணியும் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. மேலும் பலாலி விமானதளம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்க மட்டக்களப்பு விமான நிலையப் பணிகளை நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, தென்னிந்தியா வில் இருந்து முதல் விமானம் அக்.17-ம் தேதி யாழ்ப்பாணத்துக்கு வரும். யாழ்ப்பாண விமான நிலையத்துடன், மட்டக்களப்பு மற்றும் ரத்மலானை விமான நிலையங்களையும் சர்வதேச விமான நிலையமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

முதற்கட்டமாக மதுரை, திருச்சி, சென்னை, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி ஆகிய விமான நிலையங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானங் கள் இயக்கப்படும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in